(எஸ்.பி;.நாதன்)
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பாலத்தடிச்சேனை நாகதம்பிரான் ஆலயத்தில் பல பொருட்கள் உடைக்கப்பட்டதோடு மின் பிறப்பாக்கியும் திருடப்பட்டுள்ள சம்பவத்தைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவைத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மதவிவகாரங்களுக்கான வருமான இவர் இன்று செவ்வாய்க்கிழமை 14.10.2014 வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
ஞாயிற்றுக்கிழமை 12.10.2014 இரவு சில விஷமிகளால் பாலத்தடிச்சேனை நாகதம்பிரான் ஆலயம் சேதமாக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று 10.10.2014 பாலத்தடிச்சேனையில் நாகதம்பிரான் ஆலயத்திற்கு அருகிலிருந்த முருகன் ஆலய கொடித்தம்பப் பிள்ளையார் சிலையும் உடைக்கப்பட்டது.
இவ்விரு ஆலயங்களின் மிக அருகிலேயே இராணுவ காவற்சாவடி ஒன்று அமைந்துள்ளது. இந்த நிலையில் நடைபெற்ற இக்களவு தொடர்பாக பொது மக்கள் சந்தேகங்களை எழுப்புகின்றனர்.
இந்த விஷம செயற்பாடுகள் மிகவும் வன்மையான கண்டனத்துக்குரியவை விசேட பூசை கிரியைகள் ஒழுங்குபடுத்த தீர்மானித்த வேளை இச்சம்பவம் நடந்துள்ளது.
இது தொடர்பாக தீவிர விசாரணையை மேற்கொள்வதுடன், இந்து ஆலயங்களை இவ்வாறான அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவதுடன், இச்செயல்களை மேற்கொண்டு வருபவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என பொலிஸாரைக் கேட்டுள்ளதாக தனது கண்டன அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment