0

(எஸ்.பி.நாதன்)

அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்றக் கூடிய மக்கள் பிரதிநிதிகள் இருந்தால் தமிழ்ப் பிரதேசங்கள் அபிவிருத்தியடையும்' என மக நெகும எனப்படும் வீதி அபிவிருத்தி உபகரணங்கள் கம்பனியின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் காரியாலயத்தைத் திறந்து வைத்து மக்களுக்கு தென்னங்கன்றுகள் விநியோகிக்கும் நிகழ்வு நேற்று ஞாயிறு இரவு மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடியில் இடம்பெற்றது.

கல்குடாத் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் டி.எம். சந்திரபால தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது..

தொடர்ந்து உரையாற்றிய  கிங்ஸ்லி ரணவக்க 'உங்களது பிரதேசங்கள் அபிவிருத்தி குறைந்த நிலைமையில் இருப்பதற்கு இந்தப் பகுதிகளில் அரசோடு இணைந்து பணியாற்றக் கூடிய அரசாங்கக் கட்சிகளின் பிரதிநிதிகள் இல்லாதிருப்பதே காரணமாகும்.

இந்தப் பிரதேசத்திலுள்ள ஒரு சிறிய தேவையைக் கூட எம்மால் உடனடியாக நிவர்த்தி செய்து தர முடியாத நிலைக்கு அதுதான் காரணம்.
அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்றக் கூடிய அரசாங்கக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் இந்தப் பகுதியிலே இருப்பார்களாயின் உங்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்துதர வழிவகைகள் இருக்கும்

இந்த மாவட்டத்திலிருந்து நீங்கள் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உண்மையில் அரசாங்கத்தோடு இணைந்து பணியாற்ற முன்வருவார்களாயின் நீங்கள் அனுபவிக்கும் எத்தனையோ பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்துவைக்க வழியேற்படும்.

உங்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்று கருதித்தான் உங்களது பிரதிநிதிகளாக நீங்கள் அவர்களைப் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியிருக்கின்றீர்கள்.

ஆனால், அவர்கள் எதிர்ப்புறத்தில் அமர்ந்து எந்நேரமும் அரசாங்கத்தைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருப்பதால் எதுவும் நடந்து விடப்போவதில்லை.
சும்மா இருந்து கொண்டு அரசாங்கத்தைத் திட்டுங்கள் என்று கூறி நீங்கள் அவர்களை உங்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பவில்லை.

ஆனால், அவர்கள் ஒரு போதும் உங்கள் தேவைகளைப் பற்றிக் கதைக்காமல் அரசாங்கத்தைத் திட்டித் தீர்ப்பதிலேயே காலங்கழிக்கிறார்கள்.
இது இன்று நேற்றுத் தொடங்கிய அரசியலல்ல. காலங்காலமாக இதுதான் நடக்கிறது. எனவே எதிர்காலத்தில் இது பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.
அரசாங்கத்திடமிருந்து கிடைக்கக் கூடியவைகளை மக்களுக்குப் பெற்றுக் கொள்வதில் அவர்கள் அக்கறை காட்ட வேண்டும். அப்படியானவர்களை நீங்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.' என்றார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top