0
(சண் & மன்மதன்)


மட்டக்களப்பில் 21 வயதிற்கு கீழ்பட்ட சிறார்களுக்கு சிகரட் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, அரச அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க இன்று அவ்வாறான விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உதவி மதுவரி ஆணையாளர் (கிழக்கு) கே.எம்.யி.பண்டார , மட்டக்களப்பு மதுவரி அத்தியட்சகர் என்.சோதிநாதன் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா உட்பட மதுவரி பரிசோதகர்களான டீ.பி.அலவத்தேகம, ஆர்.எஸ்.கே.ரணசிங்க, ஏ.ஆனந்த நாயகம்  ஆகிய உள்ளிட்ட குலுவினரால் இன்று (27) திங்கட்கிழமை காலை முதல் நண்பகல் வரை இவ்வாறு விற்பனை செய்த 24 விற்பனையாளர்களுக்கு  எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது கல்லடி, மட்டக்களப்பு நகர் , ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, மண்முனை போன்ற பிரதேசங்களில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவர்களுக்கு எதிராக  மட்டக்களப்பு  நீதவான் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதவான் என்.எம்.எம்.அப்துல்லாவினால் எச்சரிக்கை செய்யப்பட்டு தண்டப்பணம் ரூபாய் இரண்டாயிரம் வீதம் அறவிடப்பட்டுள்ளது.

இவ்வாண்டில் ஒரே நாளில் அதிகமான விற்பனையாளர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட முதல் சம்பவம் இது எனவும் குறிப்பிட்டனர்.

இவ்வாண்டு மட்டக்களப்பு மதுவரி நிலையத்தினால் 654 சட்டவிரோத கள்ளு, சாராயம், கஞ்சா, ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.தங்கராசா மேலும் கருத்து தெரிவிக்கையில் எதிர்காலத்தில் இவ்வாறாக செயற்படும் விற்பனையாளர்களுக்கு எதிராக தாம் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top