(சச்சு, கமல் & மன்மதன்)
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட வின்சன்ட் தேசிய உயர்தர பாடசாலைக்கும் மட்/சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரிக்குமிடையில் கடந்த நான்கு வருடங்களாக இடம்பெற்றுவந்த "பாடுமீன் சமர்" BIG MATCH-2014 கிரிக்கட் போட்டி தொடர்ச்சியாக 5வது வருடமாக இன்று சனிக்கிழமை 25ம் திகதி காலை 8.00 மணிக்கு இரு பாடசாலைகளின் அதிபர்களான அருட் சகோதரி அருள்மரியா மற்றும் திருமதி ஆர்.கனகசிங்கம் ஆகிய இருவரது தலைமையில் மட்/சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
ஆரம்ப துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட வின்சன்ட் அணியினர் இருபது ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சிசிலியா அணியினர் ஆறு விக்கட்டுக்களால் 19.4 ஓவர்களில் வெற்றியை தமதாக்கி கொண்டதுடன், இதுவரை நடைபெற்ற ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளில் தமது வெற்றியினை நிலைநாட்டியுள்ள பெருமையினையும் தம்வசப்படுத்தியிருந்தனர்.
காலை நேர ஆரம்ப நிகழ்விற்கு மட்டு மாநகர சபையின் ஆணையாளர் எம்.உதயகுமார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வினை ஆரம்பித்து வைத்ததுடன், மாலை நேர நிகழ்வுகளிற்கு மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.குருகுலசிங்கம் , உதவிக்கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வி.லவகுமார், மட்டக்களப்பு கிளை செலான் வங்கி முகாமையாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு பிரதான அனுசரணையினை செலான் வங்கியினர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment