விண்ணவனே மண்ணகத்தில் நிரந்தரமாய்
விடியல் தர வந்துதித்த மன்னவனே
அன்னை மரி மடியினின்று அன்பினால் ஆள இங்கு
அவதாரம் பெற்று வந்த புண்ணியனே
மந்தைகளை அடைக்கும் நல் பெத்தலேகம்
மலைத்தொழுவம் தனில் தவழ்ந்து
நல்லதோர் சமாதானம் உலகினிலே நிறைந்திருக்க
வல்லவனாய் வடிவெடுத்த இறைமகனே
இஸ்ராயேல் குலக்கொழுந்தாய் எம்மையே ஆள்வதற்கு
இம்மண்ணில் பிறந்திட்ட தலைமகனே
தொல்லைகளை நீக்க இங்கு புதுவருகை தந்த உந்தன்
நல்வரவு எங்களுக்கு ஆசியாவின் அதிசயமே
நித்திய சுதனே நீ இங்கு வந்து பிறந்ததினால்
சத்தியம் நிலைத்து சமாதானம் மலரும் என்றோம்
தப்பென்ன செய்தோம் தமிழராய்ப் பிறந்ததினால்
எப்போதும் போல் இன்னும் ஏங்கித் தவிக்கின்றோம்
சத்திரங்கள் தேடிச் சிலர் நிறம் மாறிச் சரணடைந்து
பத்திரமாய்ப் பணப்பரிசும் பதவிகளும் பெறுகின்றார்
இத்தனையும் செய்து எங்களையும் அடகுவைத்து வாள்
கத்தியுடன் ஏரோது பிஞ்சுப் பாலகரைக் கொன்றது போல்;
கழுத்தறுக்கும் கொலைவெறியால் அட்டகாசம் புரிகின்றார்
மழுப்பலான அறிக்கை செய்து அரசியலும் செய்கின்றார்
வெறுத்துப் போய்க் கிடக்கின்றோம் வெள்ளியொன்று தூரத்து
கறுப்பு மேகத்தை ஊடறுத்து ஒளிக்கீற்றாய்
தெறித்து வருவது தெரிகிறது உன் பிறப்பு விடுதலையை
நிறைத்து வரட்டும் சமாதானம் உன் வரவால் கிடைக்கட்டும்
Post a Comment