0
(த.லோகதக்சன்)

மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடச் சென்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரனை அழுதவாறு மக்கள் சந்தித்தனர்.


இச்சம்பவத்தை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் வியாழக்கிழமை பிற்பகல் பாதிப்பு நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

உறவுகளை இழந்து, சகல உடமைகளையும் இழந்து பரிதவித்துக் கொண்டிருந்த கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலய முகாம் மற்றும் பூணாகலை தமிழ் மகா வித்தியாலய முகாம் ஆகியவற்றில் வாழும் மக்களை நேரடியாக சென்று பார்வையிட்டு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொண்டார்.

இவ்வேளை அம்மக்களால், அவசியமாக தமக்கு தேவையாக உள்ளதாக குறிப்பிட்ட உடைகள், அவசிய உதவிகளையும் அம்மக்களின் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பண்டாரவளை நகரில் வெள்ளிக்கிழமை கொள்வனவு செய்து இரு இடைத்தங்கல் முகாமில் உள்ளவர்களுக்கும் வழங்கி வைத்தார்.

இந்நிலச்சரிவு காரணமாக 54 குடும்பங்களின் குடியிருப்புக்கள் உட்பட்ட பல உயிர்கள் அழிவடைந்தது.

இந்நிகழ்வில் உயிர் இழந்தவர்களில் நான்கு பேரின் உடல்கள் மாத்திரம் மீளப்பெறப்பட்ட நிலையில் இன்னும் 70க்கும் மேற்பட்ட உடல்கள் நிலத்தில் புதையுண்டு கிடக்கின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வனர்த்த நிகழ்வில் முற்றுமுழுதாக 71 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட போதும் 54 குடும்பங்களே பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதை அறிய முடிந்தது.

ஏனைய குடும்பங்கள் அபாய எச்சரிக்கையின் நிமிர்த்தம் தங்கள் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெற்றோரை இழந்தவர்கள் கிட்டத்தட்ட ஆறு பேர் உள்ளதாக அறிய முடிந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

சில செய்திகள் மிகைப்படுத்தப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இம்மக்களின் இடைத்தங்கல் முகாம் பராமரிப்பு ஒழுங்கமைப்பு மிகவும் மந்தகதியில் நடைபெறுவதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்மக்கள் தங்களை மீண்டும் இவ்வாறான அனர்த்தம் நிகழாத பகுதியில் தனியான வீடுகளை அமைத்து குடியேற்ற உதவுமாறு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமது உறவுகளின் சடலங்களை கூட பெறமுடியாத நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் துன்புறுவதாக மிகவும் வேதனையுடன் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

முற்றாக மண் மூடி பாதிக்கப்பட்ட மீரியபெத்த கிராமத்தில் 54 வீடுகள், 300 வருட பழமையாக குலதெய்வ ஆலயம், பால் சேகரிக்கும் நிலையம் இரண்டு, வாகனங்கள் திருத்தும் இடம், கடைகள் இரண்டு, மருத்துவ மாது குடும்பம் தங்கியிருந்த விடுதி, சாரதியின் வீடு, சிகிச்சை நிலையம் போன்றவை முற்றாக மூடப்பட்டதுடன், 70க்கு மேற்பட்டோர் புதையுண்டு உள்ளனர் என அறிய முடிந்துள்ளது.

இதன்போது பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனிடம் தாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வருகை தந்து எங்களை பார்வையிட்டு, குறைகளை கேட்டு நிறைவேற்றித் தந்தமை தங்கள் வேதனைக்கு ஆறுதலாக உள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் அழுதவாறு தெரிவித்தனர்.











Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top