0
(வாழைச்சேனை நிருபர்)

நாட்டில் அண்மைக்காலமாக சிறுவர்கள் மற்றும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்முறைகள் மற்றும் கொலைச் சம்பங்களுக்கு பொலிஸாரும், நீதிமன்றமும் நடவடிக்கை எடுப்பதோடு பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கூறி வெள்ளிக்கிழமை வாழைச்சேனை பிரதேசத்தில் கண்டனப் பேரணி ஒன்று இடம் பெற்றது.


வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் நிறுவாகம் மற்றும் பிரதேசத்தில் உள்ள சமுக சேவைகள் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி ஜூம்ஆத் தொழுகையை அடுத்து வாழைச்சேனை மட்டக்களப்பு பிரதான வீதியில் நாடாத்தியது.

கடந்த 2014.10.05ம் திகதி வாழைச்சேனை கோழிக்கடை வீதியில் தனிமையில் வசித்து வந்த ஏழு (07) பிள்ளைகளின் தாயான றம்ளார் பரிகாரியார் ஹாஜி ஆயிஸா பீபி (வயது 68) எனும் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு சட்டத்தின் முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கேட்டுக் கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது குற்றவாளிக்கு யாரும் உதவ வேண்டாம், தண்டணை வழங்கி தர்மத்தை பாதுகாருங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறையை நிறுத்துங்கள், தண்டனை வழங்கு தண்டனை வழங்கு குற்றவாளிக்கு தண்டனை வழங்கு, குற்றம் செய்தவன் தண்டிக்கப்படாவிட்டால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை,  தடை செய் தடை செய் வன்முறையை தடை செய், பெண்கள் பயமின்றி வாழ வழிவகுத்து தாருங்கள், பயமற்ற சூழலை சட்டம் ஏற்படுத்தி தர வேண்டும், குற்றம் செய்தவனை சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப விடக்கூடாது என பல கோசங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது அவ் இடத்திற்கு வருகை தந்த வாழைச்சேனை பிரதேசத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் விதானகே, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜூத் ஆகியோரிடம் பிரதேசத்தில் உள்ள சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை அடங்கிய மகஜர்கள் வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவர் எம்.எச்.எம்.மீறாமுஹைதீனினால் வழங்கி வைக்கப்பட்டதுடன், கண்டனப் பேரணியில்; ஏராளமான பொது மக்கள், சிறுவர்கள் கலந்து கொண்டனர்.













Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top