இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் நான்காவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் பணிப்பாளர் தெரிவுக்கான தேர்தலும் சனிக்கிழமை 11.10.2014 கொழும்பு ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சிப் பயிற்சி நிலையத்தில் மஹிந்த சில்வா அரங்கில் இடம்பெற்றது.
இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் பணிப்பாளர் தெரிவுக்கான தேர்தலில் ஏறாவூர் நகர பிதா அலிஸாஹிர் மௌலானா தேசியத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் திட்ட அலுவலர் செல்வி ஸ்ரீவாணி அறிவித்துள்ளார்.
ஆசிய மன்றத்தின் ஏற்பாட்டில் இத்தெரிவு நடைபெற்றது. நாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் மேம்பாடு மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளின் வெளிநாட்டுப் பயணங்கள் போன்ற விடயங்கள் இச்சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு வருடங்களுக்கொருமுறை இத்தெரிவு நடாத்தப்படுவதுண்டு. இதேவேளை பொதுநலவாய நாடுகளின் தலைமைப்பதவியை இலங்கை ஜனாதிபதி வகிப்பதனால் பொதுநலவாய நாடுகளிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் இணையத்தின் தலைவராகவும் அலி ஸாஹிர் மௌலானா செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. உள்ளுராட்சி மன்றப்பிரதிகளின் பிரச்சினைகள் தொடர்பாக சட்டரீதியாக அணுகும் ஒன்றியமாக இச்சம்மேளனம் கருதப்படுகிறது.
அலிஸாஹிர் மௌலானா மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும், ரணில் விக்கிரமசிங்ஹ பிரதம மந்திரியாக இருந்தபோது அவரது பிரதம ஆலோசகராகவும் பணியாற்றயவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment