வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வீதிப்புனரமைப்பு வேலைகளை இடை நிறுத்தக்கோரி திருகோணமலை துளசிபுர பொதுமக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
எதிர்வரும் 29ம் திகதி அவ் வீதியில் அமைந்துள்ள திருகோணமலை அபயபுர மகாவித்தியாலயத்தில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ள இருப்பதன் காரணமாக இவ் வீதியை குறுகிய காலத்தினுள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பள்ளங்களை நிரப்பி தற்காலிகமான புனரமைப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
இதனை அவதானித்த உள்ளூர் வாழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுவரை காலமும் புனரமைக்கப்படாது காணப்படும் வீதியை எதற்காக தற்காலிகமாக நிரப்பவேண்டும் அவ்வாறு தற்காலிக திருத்த வேலைகளை மேற்கொண்டு பணத்தை வீண்விரயம் செய்யாது திருத்தவேலைகளை செய்வதாயின் சீரான முறையில் புனரமைத்துத்தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து ஸ்தலத்திற்கு வருகைதந்த வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வீதியை தற்போது தற்காலிகமாக புனரமைத்து தருவதாகவும் எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இவ்வீதியை முற்றாக புனரமைத்துதருவதாகவும் அதிகாரிகள் கூறியதை அடுத்து மக்கள் அவ்விடத்தை விட்டு கலைந்து சென்றனர்.


Post a Comment