0
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியிலிருக்கும் கிழக்கு மாகாணசபையின் கதி  இன்று   திங்கட்கிழமை (12)  தெரியவரும் என்று அந்த மாகாணசபையின் உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண சபையமர்வு, 2014ஆம் ஆண்டு டிசெம்பர் 12ஆம் திகதியன்று இன்று 12ஆம் திகதி வரைக்கும் ஒத்திவைக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் 01.12.2014 அன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது, அமளிதுமளி ஏற்பட்டது.

இதேவேளை, செங்கோலையும் பறிப்பதில் இரு தரப்பினருக்கும் இடையில் இழுபறியும் ஏற்பட்டது. இதனையடுத்தே கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி சபையை இன்று 12ஆம் திகதி வரையும் ஒத்திவைத்தார். அதன்படி சபை நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை 12.01.2015 கூடவிருக்கின்றது.

37 உறுப்பினர்களைக் கொண்ட கிழக்கு மாகாணசபை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பவற்றின் கூட்டாட்சியில் 22 உறுப்பினர்களை கொண்டிருந்தது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகள் அதிலிருந்து விலகின. அந்தக் கட்சிகளின் மாகாணசபை உறுப்பினர்களும் எதிரணியுடன் இணைந்துகொண்டார்கள். கிழக்கு மாகாணசபையில் ஐ.ம.சு.கூட்டமைப்பு 12 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 உறுப்பினர்களையும் எதிரணியில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 உறுப்பினர்களையும் கொண்டிருந்தன. தற்போதைய நிலையில் ஆளும் கூட்டணியிடம் 11 பேரும் எதிரணியிடம் 26 பேரும் என்றவாறு எண்ணிக்கை மாறுபட்டுள்ளது.

தற்போது கிழக்கு மாகாணசபையில் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. ஜனாதிபதி மாறியிருக்கின்ற நிலையில் வடக்கு மாகாணசபை தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணசபைகளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சியிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியதிகாரத்தின் கீழுள்ள கிழக்கு, ஊவா மற்றும் மேல் ஆகிய மூன்று மாகாண சபைகளின் ஆட்சியும் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top