சிறுபான்மை மக்களின் மனங்களில் நிலவும் நிருவாகம் மற்றும் சமுகமட்டங்களில் புறக்கணிக்கப்படுகின்ற ஒதுக்கப்படுகின்ற போதுமான சந்தேகங்களை நீக்கி அனைவரும் இலங்கையர் என்ற ரீதியில் நலலாட்சியை ஏற்படுத்த வாழ்த்துகின்றோம்.
இவ்வாறு சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைப்பேரவையின் அம்பாறை மாவட்ட பேரவை புதிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு அனுப்பிவைத்துளள வாழ்த்துச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரவையின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் செயலாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்தகாலங்களில் மக்கள் மனங்களில் குறிப்பாக சிறுபான்மை மக்கள் மனங்களில் இருவகையான நெருக்கிடைகள் இருந்தன. ஒன்று நிருவாக ரீதியாக நாம் புறக்கணிக்கப்படுகின்றோம் அல்லது ஒதுக்கப்படுகின்றோம் என்ற உணர்வு.
மற்றது சமுக மட்டத்தில் தாம் ஒதுக்கப்படுகிறோம் தமது சமயங்கள் பலவழிகளாலும் புறக்கணிக்கப்படுகின்றன போனற் உணர்வுகள் நிலவின.
இம்மனநிலைகளை பூரணமாக நீக்கும் பட்சத்தில் எவருக்கும் தனிநாட்டுக்கோரிக்கையோ தனிஅலகுக்கோரிக்கையே தனி மாவட்டக்கோரிக்கையோ தனி நிருவாகத்தேவையோ எழமாட்டாது என்பது எமது அபிப்பிராயமாகும்.
எந்தவொரு இனக்குழுமமோ சமயகுழுமமோ தாம் புறக்கணிக்கப்படுகின்றபோது அல்லது ஒதுக்கப்படுகின்றபோதுதான் தாம் தனியாகப்பிரிந்து செயற்படவேண்டும் என்ற சிந்தனை தலைதூக்குகின்றது.
அதனை இந்நாட்டில் முற்றாக ஒழித்தால் அனைவரும் இலங்கையர் என்றரீதியில் இதயசுத்தியுடன் செயற்படமுடியும்.
எம்மக்களின் பங்களிப்பினைப் பெற்று இலங்கை சனநாயகசோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கும் எமது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இம்முறை தேர்தல் முடிவுகூட பல உண்மைகளை உலகிற்கு உணர்த்திநிற்கின்றது. இனவாதம் பேசி இனி தேர்தலை வெல்லமுடியாது. அதாவது சிங்களமக்களும் இம்முறை இனவாதத்தை வெறுத்துள்ளனர். இதன்காரணமாகவே 70வீதம் தமக்கு வாக்களிப்பார்கள் என்ற எண்ணத்தில் சிறுபான்மைமக்களின் ஆதரவு வாக்குகள் தேவையில்லை என்ற அறிவிப்புகள் இறுதிநேரத்தில் வெளியாகியிருந்தன. நடந்தது என்ன?
எந்த மக்களைநம்பி இவ்வினவாதக்கருத்தை முன்வைத்தனரோ அதே சிங்களமக்கள் அதனை நிராகரித்துள்ளனர். 70வீதம் கிடைக்கவில்லை.தோற்றார்கள்.
மாறாக புதிய ஜனாதிபதியாகிய தங்களின் வெற்றியில் சிறுபான்மை மக்களின் குறிப்பாக வடக்கு கிழக்கு தமிழ்பேசும் மக்களின் பங்களிப்பு என்பது பாரிய செல்வாக்கைச் செலுத்தியிருப்பதை உணர்வீர்கள்.
சிறுபான்மைமக்களின் வாக்குகள் கிடைத்திராவிடின் வெற்றி என்பது பகற்கனவே.
எனவே மாற்றத்தை விரும்பிய சிறுபான்மைமக்களின் நீண்டகால பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பதோடு அவர்களது நியாயமான கோரிக்கைகளை தேவைகளை அபிலாசைகளை நிறைவேற்றிவைக்கவேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தங்களின் தேசிய அரசு சகல சமுகங்களையும் உள்வாங்கி சாதி இன மத பேதமின்றி நாட்டைக்கட்டியெழுப்ப ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இறைவனை இறைஞ்சுவதோடு தங்களை மனதார வாழ்த்துகின்றோம்.
Post a Comment