பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸினால் அருளாளர் யோசப் வாஸ் புனிதராகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார். இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வருகை தந்துள்ள பரிசுத்த பாப்பரசர் இன்று புதன்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற விசேட திருப்பலியின் போது யோசப் வாஸ் அடிகளார் புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
புனித யோசப் வாஸ் இந்தியாவின் கோவாவில் 21 ஏப்ரல் 1651 இல் ஆறு பேர் கொண்ட பிள்ளைகளின் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாகப் பிறந்தார். இவரது தந்தை கிறிஸ்ரேவோ, தாய் மரியா. ஆரம்ப கல்வியினை தனது சொந்தக் கிராமத்தில் கற்ற இவரை மேற்படிப்பிற்காக கோவா நகரத்திற்கு தந்தையார் அனுப்பி வைத்தார். கோவா நகரத்திற்கு சென்ற இவர் அங்கு போர்த்துக்கீசம், லத்தீன் ஆகிய மொழிகளை கற்றுத் தேறினார்.
இதனையடுத்து மானுடவியல் மற்றும் இறையியல் ஆகிய துறைகளைக் கற்றுத் தேறிய யோசப் வாஸ் அவர்களுக்கு 1675 இல் கோவா பேராலயத்தில் தியாக்கோனாக திருநிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து அடுத்த வருடம் 1676 ஆம் ஆண்டு கோவா பேராலய பேராயரினால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டிருந்தார்.இவர் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட காலத்தில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் ஒல்லாந்தர்களின் ஆட்சி நிலவியிருந்தது. இவர்கள் புரட்டஸ்தான்சு மதத்தினைப் பரப்பும் அதேவேளையில் உரோமன் கத்தோலிக்க மதத்தினையும், மதகுருக்களையும் மக்களையும் துன்புறுத்தினர்.
கத்தோலிக்க மக்களினால் வழிபட்டு வந்த பல தேவாலயங்கள் ஒல்லாந்தர்களினால் அழிக்கப்பட்டன. மேலும் கத்தோலிக்க மதத்தின் போதனைகளுக்கு கட்டுப்பாடு விதித்ததுடன் மீறி போதனையில் ஈடுபடும் குருக்களை தீயிட்டு எரித்துக் கொலை செய்திருந்தனர் ஒல்லாந்தர்கள். இத்தகைய துன்புறுத்தல்களினால் பாதிப்படைந்த கத்தோலிக்க மதத்தினை மீட்டெடுக்கும் வகையில் அருட்தந்தை யோசப் வாஸ் அவர்கள் செயற்படத் தொடங்கினார். இந்த நிலையில் இலங்கையில் உள்ள கத்தோலிக்க மக்களின் நலன்கருதி இலங்கைக்கு 1689 ஆம் ஆண்டு விஜயம் மேற்கொண்டார்.
மாறுவேடத்தில் யாழ்ப்பாணம் சில்லாலைப் பகுதியில் வந்து இறங்கிய யோசப் வாஸிற்கு அக்கிராம மக்களினால் பாதுகாப்பும், அடைக்கலமும் வழங்கப்பட்டது. ஒல்லாந்தர்களின் பிடியிலிருந்து தப்பி மத போதனைகளை மேற்கொள்ளும் வகையில் மாறுவேடத்தில் மறை பரப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார்.யாழ்ப்பாணம், கிளிநொச்சி, புத்தளம், பரந்தன் உட்பட பல இடங்களுக்கு கால் நடையாகவும், பசித்திருந்தும் தமது இறை பணியினை அருட்தந்தை யோசப் வாஸ் மேற்கொண்டிருந்தார். 1690 ஆம் ஆண்டு புத்தளத்திற்குச் சென்ற அருட்தந்தை யோசப் வாஸ் அங்குள்ள கத்தோலிக்க மக்களின் விசுவாசப் பயணத்திற்கு பாரிய பங்களிப்பாற்றினார்.
இதனையடுத்து 1692 ஆம் ஆண்டு கண்டிக்குச் சென்ற இவர் அங்குள்ள சிங்கள கத்தோலிக்க மக்களின் இறை பயணத்தை செப்பனிடும்பணிகளில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் கிழக்கு மாகாணம் திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்குச் சென்ற அருட்தந்தை யோசப் வாஸ் அங்கும் தமது இறை பணியினை மேற்கொண்டார்.
இவ்வாறு இலங்கையில் கத்தோலிக்க மக்கள் செறிந்து வாழும் பகுதிகளுக்குச் சென்று ஒல்லாந்தரினால் நசுக்கப்பட்டுக் கொண்டிருந்த கத்தோலிக்க மதத்திற்கு புத்துயிர் அளிக்கும் பணியினை மேற்கொண்டிருந்தார்.இறை பணியின் பாதையில் இவர் பல்வேறு சோதனைகளுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உட்பட்டிருந்த போதும் தனது இறை பணி தொடர்பில் மனம் சலித்துப் போகாமல் கத்தோலிக்க மக்களின் இறை விசுவாசத்தைக் கட்டியேழுப்பியிருந்தார்.
இவரின் இறை பணியினையடுத்து கத்தோலிக்க திருச்சபையானது மீண்டும் இலங்கையில் புத்துயிர் பெறத் தொடங்கியது. இவரின் இறை பணியில் கத்தோலிக்க மக்களின் அதீத ஈடுபாடும், இறை அச்சமும் மேன்மேலும் வலுச் சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறை பணியில் சலிக்காமலும் பக்தியுடனும், அதீத ஈடுபட்டுடனும் ஈடுபட்டிருந்த அருட்தந்தை யோசப் வாஸ் அவர்கள் 1711 ஆம் ஆண்டு கண்டியில் தனது 60வது வயதில் இயற்கை எய்தினார்.
இறை பணியில் சலிக்காமலும் பக்தியுடனும், அதீத ஈடுபட்டுடனும் ஈடுபட்டிருந்த அருட்தந்தை யோசப் வாஸ் அவர்கள் 1711 ஆம் ஆண்டு கண்டியில் தனது 60வது வயதில் இயற்கை எய்தினார்.
இந்த நிலையில் இவரின் கடந்த கால அற்புதங்கள், அருள் வழங்கல்களை அடுத்து கடந்த 1995 ஆம் ஆண்டு ஜனவரி 21 அன்று பரிசுத்த பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரினால் அருளாளராக திருநிலைப்படுத்தப்பட்டிருந்தார். தொடர்ச்சியாக கத்தோலிக்க மக்களின் செப, தப வழிபாடுகளினையடுத்து அருளாளர் யோசப் வாஸ் அவர்கள் 20 வருடங்களின் பின்னர் முதலாம் பிரான்சிஸினால் இன்று 14 ஜனவரி 2015 அன்று புனிதராக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த திருச்சடங்கானது கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை எட்டு மணியாளவில் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கதரினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் வழிகாட்டலில் விசேட திருப்பலியினை ஒப்புக் கொடுத்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் புனிதராக அருளாளர் யோசப் வாஸ் அவர்களை திருநிலைப்படுத்தியிருந்தார். இந்த திருச்சடங்கில் நாட்டின் நாலாபக்கத்திலிருந்தும் வருகைதந்த பல இலட்சம் மக்கள் இன, மத பேதம் இன்றி கலந்து கொண்டு இறையாசியைப் பெற்றிருந்தனர்.
இந்தச் செய்தி பற்றிய உங்கள் கருத்துக்கள், விமர்சனங்களை கீளேயுள்ள Comment Box இல் அருமையாக பதிவுசெய்யுங்கள்.
இங்கு பார்வையாளர்களால் COMMENT செய்யப்படும் கருத்துக்களுக்கு BATTIFM பொறுப்பல்ல
Post a Comment