'நாகரிகமற்றது'' 'ஆபத்தானது' என
அதிகாரத்திற்கு இரையாகின
சிந்திக்கச் சிரிப்பு மூட்டும்
அங்கதமும் நகைச்சுவையும்
அவை அற்றுப்போன
வெளிகள் தோறும்
கொடிவிட்டுப் படர்ந்தெழுகின்றன
கிண்டல்களும் சீண்டல்களும்
முதியவர் பெண்கள்
மூன்றாம்பாலினர் மாற்றுத்திறனாளிகள்
ஓரங்கட்டப்பட்டவர் உள்ளங்கள் கிழித்து
தாமெனத் திமிர்கொண்டு திரிக்கின்றன அவை
மௌனத்தின் குரல்கள்
ஒலிக்க எதிரொலிக்க
நியாயங்கள் எங்கெங்கும்
வாழ்ந்திட வளர்ந்திட
எழுத்தில் பேச்சில்
எல்லா வழிகளிலும்
வருக வருக
கோமாளிகாள் மீளவும் வருக
இருண்டு இறுகுண்ட வெளிகள்
வெளித்துச் சிவக்க
அங்கதமும் நகைச்சுவையும்
உயிர் கொள்ளும்
கோமாளிகாள் மீளவும் வருக
சி. ஜெயசங்கர்
Post a Comment