0
கத்தோலிக்க திருச்சபையின் உச்ச பீடமான வத்திக்கானிலிருந்து புனித பாப்பரசர்கள் இலங்கைக்கு வருகை தந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்ற விடயம் முக்கிய அம்சமாக கவனிக்கப்படுகின்றது. 
இலங்கைக்கான தன்னுடைய இரண்டு நாள் விஜயத்தினை நேற்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு வந்த புனித பாப்பரசர் பிரான்ஸிஸ், கொழும்பு காலிமுகத்திடலில் சற்று முன்னர் (இன்று புதன்கிழமை) திருப்பலியை ஒப்புக் கொடுத்திருந்தார். இன்று மாலை மன்னார் மடுத் தேவாலயத்தில் திருப்பலியை ஒப்புக் கொடுக்கவுள்ளார்.
1970 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இலங்கைக்கு பாப்பரசர்களின் வருகைகள் இடம்பெற்றன. முதன்முதலாக இலங்கைக்கு வருகை தந்தவர் புனித பாப்பரசர் 5வது சின்னப்பரே. இவருக்குப் பின்னர் 1995 ஆம் ஆண்டில் புனித பாப்பரசர் அருளப்பர் இலங்கைக்கு திருப்பயணம் மேற்கொண்டார். இவருக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் 3வது பாப்பரசராக பிரான்ஸிஸ் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கைக்கு புனித பாப்பரசர்கள் வந்த மூன்று சந்தர்ப்பங்களில் ஆட்சி மாற்றங்கள் இடம்பெற்றிருப்பதை சுட்டிக்காட்டக் கூடியதாக உள்ளது. 1970 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த டட்லி சேனநாயக்க (ஐ.தே.க) பாப்பரசரை அழைத்த போதிலும், அவர் இலங்கைக்கு வருகை தந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவே (சு.க) வரவேற்றார்.
இதேபோல், 1995 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக இருந்த டி.பி.விஜயதுங்க (ஐ.தே.க) பாப்பரசரை அழைத்தாலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவே (பொ.மு) வரவேற்றார். தற்போதும், முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ (ஐ.ம.சு.கூ) நேரில் சென்று அழைப்பு விடுத்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவே (பொது எதிரணி) வரவேற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top