கிழக்கு மாகாணத்தில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமிழ்த் தேசியக்கு கூட்டமைப்புக்கு நிபந்தனை அற்ற ஆதரவு அளிப்பதற்கு தயாராகவுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் செவ்வாய்க்கிழமை (20) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, 'கிழக்கு மாகாணசபையின் சமீபகால அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலை தொடர்பிலும் அம்மாகாணத்தின் முதலமைச்சர் பதவிக்கான முரண்பாட்டு நிலை தொடர்பிலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மிக ஆழ்ந்த கவனத்துடன் உற்றுநோக்கி வருகிறது.
கிழக்கு மாகாணத்தை முதற்தடவையாக ஆட்சி செய்த கட்சி என்ற வகையிலும் தமிழ் மக்களின் கணிசமான ஆதரவை பெற்ற பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையிலும் மக்கள் சார்ந்து எம்மீது சுமத்தப்பட்டுள்ள பொறுப்புக்களை நாம் ஒருபோதும் தட்டிக்களிக்கப் போவதில்லை. இது எமது கடந்தகால அரசியல் மூலம் உணர்த்தப்பட்டவையே. தேசிய அரசியல் இணக்கப்பாட்டுடன் செயற்படுவதாக கூறிக்கொள்ளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் கிழக்கு மாகாண ஆட்சி தொடர்பில் முரண்பட்டுக்கொள்வது வேதனையானது. மாகாணசபை முறைமையானது தமிழ் மக்களின் பெறுமதிமிக்க ஆயுதப்போராட்டத்தின் விலைப்பாடாக கிடைக்கப்பெற்றது என்பதிலும் அதில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள், அரசியல் உரிமைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் எமது கட்சி உறுதியாக இருந்துவருகின்றது.
கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராகுவதற்கு யாருடனும் எத்தகைய விட்டுக்கொடுப்புடனும் செயற்பட நாம் தயாராக இருக்கின்றோம். கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழர்களின் கையிலிருந்த ஆட்சி அதிகாரத்தை எம்மவரே பிடுங்கி எடுத்த நயவஞ்சக அரசியலுக்கு இரையாகாமல் தூரநோக்குடன் செயற்பட நாம் தயாராகவுள்ளோம். தற்போதைய கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் ஆட்சி அமைப்பதற்கும் அக்கட்சி சார்பான ஒருவர் முதலமைச்சராகுவதற்கும் எமது கட்சி நிபந்தனையற்ற ஆதரவு வழங்க தயாராகவுள்ளது.
தற்போதைய கிழக்கு மாகாண ஆசணப்பங்கீடுகள் அடிப்படையில் த.தே.கூ. 11 உம் ஐ.தே.க. 04 உம் உள்ளன. தமிழர் ஒருவர் முதலமைச்சராவதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற ஏனைய சில மாகாணசபை உறுப்பினர்களது ஆதரவுடனும் எமது கட்சியின் இரண்டு உறுப்பினர்களது ஒத்துழைப்புடனும் கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் புதிய ஆட்சியை அமைக்கமுடியும். இதனூடாக த.தே.கூட்டமைப்பு முதலமைச்சர் பதவி மாத்திரமின்றி நான்கு அமைச்சுக்களில் இரண்டு அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக்கொள்ளமுடியும். ஏனைய அமைச்சுப் பதவிகளையும் தவிசாளர் பதவியையும் ஐ.தே.க. இற்கும் ஏனைய கட்சி உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளிக்கமுடியும்.
எமது கட்சி அமைச்சுப் பதவிகளிலோ அல்லது எனைய பதவிகளிலோ இடம்பெறப்போவதில்லை. எனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எஞ்சி இருக்கின்ற இரண்டரை வருடகாலப் பகுதியில், தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுகின்ற நியாமான அரசியல் தீர்வையும் அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுக்கமுடியும்' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment