கிழக்கு மாகாண சபை அமர்வு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்றைய சபை அமர்வில் இரு தரப்பு சார்பிலும் மொத்தமாக 30 பேர் சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9.30 மணியளவில் கிழக்கு மாகாண சபை அமர்வு ஆரம்பமானது.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார்.
அதாவது ஆளும் தரப்புக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும் மக்கள் நலன் கருதி இன்று 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது.
எனினும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட நிதி விவகாரத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால கிழக்கு மாகாண சபை நிர்வாகத்திற்கு ஒரு மாத காலம் விசேட அனுமதி வழங்கி, அதற்கான பணிப்புரையை விடுத்திருப்பதால் இன்றைய அமர்வில் குறித்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை எனக்கருதி இந்த அமர்வை ஒத்திவைக்குமாறு கோருகின்றேன் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சபை அமர்வை பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக தவிசாளர் அறிவித்தார்.
இதன்படி கிழக்கு மாகாண சபையின் அமர்வொன்று மூன்றாவது தடவை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment