கிழக்கு மாகாணசபையின் நடவடிக்கைகளை மீண்டும் எதிர்வரும் 20ஆம் திகதிவரை ஒத்திவைத்துள்ள அதன் தவிசாளர் ஆரியவதி கலபதி, புதிய ஆட்சியை அமைத்து வரவு -செலவுத்திட்டத்தை அன்றையதினம் சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார்.
2014ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி அன்று கிழக்கு மாகாணசபை அமர்வு, தவிசாளர் ஆரியவதி கலப்பதியினால் 2015ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் திங்கட்கிழமை (12) கிழக்கு மாகாணசபை மீண்டும் கூடியது.
கட்சி தலைவர்களின் கூட்டத்தை தொடர்ந்து சபை அமர்வு ஆரம்பிக்கப்பட்ட நிலையில், கோரம் இல்லாத காரணத்தினால் திங்கட்கிழமை (12) முற்பகல் 11 மணிவரை சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதன் பின்னர், சபை நடவடிக்கைகள் 11.15 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது, ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், கிழக்கு மாகாணசபையிலுள்ள ஆளும் கட்சியினர் பலர் எதிர்க்கட்சியின் பக்கம் வந்துள்ளதனால், ஆட்சி மாற்றம் ஒன்றை ஏற்படுத்தவேண்டியுள்ளதுடன், அதற்கான கால அவகாசமாக எதிர்வரும் 20ஆம் திகதிவரை சபையை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தண்டாயுதபாணி கோரிக்கை விடுத்தார்.
இந்தக் கோரிக்கையை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி குழு தலைவர் எல்எம்.ஜெமிலும் வழிமொழிந்தார்.
இதனைத் தொடர்ந்து சில உறுப்பினர்கள் உரையாற்றியதை தொடர்ந்து, சபை நடவடிக்கைகளை 20ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாகவும் கிழக்கு மாகாணசபையின் வரவு -செலவுத்திட்டத்தை அன்றையதினம் புதிய அரசாங்கம் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் ஆரியவதி கலபதி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபையில் கடமையாற்றும் ஊழியர்களுக்கான சம்பளங்கள் வழங்கப்படவேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
எதிர்வரும் 20ஆம் திகதிவரை சபை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதற்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி உறுப்பினர்கள்; ஆதரவு தெரிவித்தனர்.
இதேவேளை, எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர், கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரத்தில் மாற்றம் ஏற்படும் என்று ஜக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே தெரிவித்தார்.
மாகாண சபை வளாகத்தில், திங்கட்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment