0
தன்மீது முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் உடனடியாக ஆதாரங்களை  சமர்ப்பிக்குமாறு முன்னாள் பிரதியமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். 

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஞாயிற்றுக்கிழமை (18) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது,  முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தொடர்பில்  நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர்; எம்.எம்.அப்துர் றஹ்மான் கருத்துத் தெரிவித்திருந்தார். 

இந்தக் கருத்துத்  தொடர்பில் செவ்வாய்க்கிழமை (20) முன்னாள் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். 

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,   'நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் காத்தான்குடியில் ஞாயிற்றுக்கிழமை (18) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது,  என் மீது மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இதில் இரண்டு குற்றச்சாட்டுக்கள் என்னை நேரடியாக தொடர்புபடுத்தி முன்வைக்கப்பட்டுள்ளன. ஊழல் என்றும் நான் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் கடந்த 25 வருடங்களாக இவர்கள் கூறி வருகின்றனர். தற்போது அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளனர். என்மீது இவர்கள் முன்வைத்துள்ள இரண்டு ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் மூன்று அல்லது நான்கு தினங்களுக்குள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் பகிரங்கமாக முறைப்பாடு செய்து, அவற்றுக்கான ஆதாரங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன். 

இவர்கள் என்மீது சுமத்தியுள்ள ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து, மூன்று தினங்களுக்குள் எனது சட்டத்தரணியுடன் நான் நேரடியாகச் சென்று,  இவற்றுக்குரிய விளக்கத்தை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் வழங்குவதற்கு ஆயத்தமாகவுள்ளேன். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் இது தொடர்பில் விசாரணை செய்து தீர்ப்பு வழங்கவேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கின்றேன். 

எனது கடந்த 25 வருடகால அரசியல் வாழ்வில் ஒரு சிறிய ஊழல் நடவடிக்கையிலோ அல்லது அரசியல் அதிகார துஷ்பிரயோகத்திலோ ஈடுபடவில்லை என்பதையும் நிரூபிக்க நான் தயாராகவுள்ளேன். இவர்கள் 25 வருடகாலமாக என் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுக்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் இருப்பதாக குற்றம் சுமத்தி வந்துள்ளனர்.  தற்போது அவற்றுக்கான ஆதாரம் உள்ளதாகவும்; கூறியுள்ளனர். உடனடியாக அவற்றை இவர்கள் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவேண்டும். அவ்வாறு இல்லையேல், எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கு இவர்கள் முயற்சித்துவருகின்றனர். என் மீதும் எனக்கு மக்களிடமுள்ள செல்வாக்கை குறைப்பதற்கு காழ்ப்புணர்ச்சியுடன் மேற்கொண்டுவரும் இவர்களின் நடவடிக்கை தொடர்பில் நான் மக்கள் மத்தியில் நிரூபிக்கவேண்டி ஏற்படும் என்பதையும்  தெரிவித்துக்கொள்கின்றேன்' என்றார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top