'பிளவுபடாத இலங்கைக்குள் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்காக செயற்குழுவொன்றை நியமிக்குமாறு', தாம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு இணக்கம் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த செயற்குழுவை ஒரு மாதத்துக்குள் நியமித்து பிரச்சினைக்கான தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் திங்கட்கிழமை (12) கொழும்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போது, முக்கியமான ஐந்து விடயங்கள்; தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, டாக்டர் ராஜித்த சேனாரத்ன எம்.பி, ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாண உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பிற்பகல் 12 மணிமுதல் 1.30 மணிவரை இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன் எம்.பி., 'வடக்கு – கிழக்கில் இடம்பெற்றுவரும் காணி சுவீகரிப்பை தடுத்து நிறுத்தி அக்காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு நாம் ஜனாதிபதியிடம் கோரிய போது, அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதாகவும் உரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்' எனக் கூறினார்.
அடுத்ததாக, தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் நாம் கோரினோம். எமது அந்த கோரிக்கைக்கு செவிமடுத்த ஜனாதிபதி அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறினார்.
வடக்கு – கிழக்கில் நிர்வாக ரீதியாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக ஆளுநர் மாற்றம், பிரதேச செயலாளர்கள், அரசாங்க அதிபர்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமையிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தோம். இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைகளை ஏற்றுக்கொண்டு இடமாற்றங்களை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார் என சுமந்திரன் எம்.பி கூறினார்.
இதேவேளை, கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டு வடக்கு – கிழக்கில் அமைச்சர்களாகவும் பிரதியமைச்சர்களாகவும் அங்கம் வகித்த எவருக்கும் இந்த புதிய அரசாங்கத்தில் இடமளிக்கக் கூடாது என்ற விசேட கோரிக்கையொன்றையும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்தோம் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார். இறுதியாக, நீண்டகால அரசியல் தீர்வு தொடர்பில் ஜனாதிபதியிடம் கலந்துரையாடினோம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு மாதத்துக்குள் செயற்குழுவொன்றைக் கூட்டி தீர்வு தொடர்பில் ஆராயப்படும் என ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
அத்துடன், தேசிய அரசியலில் இணையுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, ஜனாதிபதி இதன்போது அழைப்பு விடுத்தார். இருப்பினும், இந்த புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து கூடிய விரைவில் நல்லதொரு முடிவை அறிவிப்பதாக நாம் தெரிவித்தோம் என சுமந்திரன் எம்.பி மேலும் கூறினார். - http://www.tamilmirror.lk
Post a Comment