அக்கரைப்பற்று மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பணிப்பாளருமான எஸ்.எல்.எம்.ஹனீபா மதனியின் வாகனத்தைத் தாக்கியதாகக் கூறப்படும் சந்தேச நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு நேற்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டார்.
ஹனீபா மதனியின் வாகனம் கடந்த 08 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் தினமன்று, அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி – அம்பாறை வீதியில் வைத்து தாக்குதலுக்குள்ளானது.
அக்கரைப்பற்று மாநகரசபை மேயர் அதாஉல்லா அஹமட் சக்கி, அக்கரைப்பற்று மாநகரசபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர் ஏ.ஜி.அஸ்மி மற்றும் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் கட்சிப் பிரமுகர் யூ.எல்.உவைஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில், இரண்டு அடியாட்கள் தனது வாகனத்தினைத் தாக்கியதாக, மு.காங்கிரசின் ஊடகப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்திருந்தார்.
ஆயினும், குறித்த சந்தேக நபர்களை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்யாமல் இழுத்தடித்து வந்ததாக, ஹனீபா மதனி கூறினார். இதனையடுத்து, ஹனீபா மதனி, தனது சட்டத்தரணியூடாக, இந்த விவகாரத்தினை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றிருந்தார்.
மேற்படி விடயத்தினை நேற்று செவ்வாய்கிழமை, கருத்தில் எடுத்துக் கொண்ட அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல், குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு, அக்கரைப்பற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
Post a Comment