இன்று வெள்ளிக்கிழமை இந்துக்களின் மாட்டுப்பொங்கல் பண்டிகை தினமாகும். உழவர்களின் உழைப்புக்கு உதவிசெய்த கோமாதாவாகிய மாட்டுக்கு நன்றிசெலுத்துமுகமாக நன்றியுணர்வுடன் செய்யும் கோமாதா பொங்கல் விழா இன்று கோமாதாக்களை வைத்திருக்கும் இந்துக்கள் வாழும் பட்டிதொட்டியெல்லாம் கொண்டாடப்படுகின்றது.
கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியம் இப்பொங்கலை உரிய இந்துகலாசார முறைப்படி எவ்வாறு கொண்டாடுவது என்பது தொடர்பில் கோமாதா பொங்கல் விழாவை இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடிப் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள குருக்கள்மடத்தில் நடாத்தியிருந்தது
குருக்கள்மடத்திலுள்ள மாட்டுப்பட்டி மாட்டுத் தொழுவத்தில் கிழக்கு இந்து ஊடகவியலாளர் ஒன்றியத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இப்பெருவிழா நடைபெற்றது.
உண்மையில் கோமாதா பூஜையும் பட்டிப்பொங்கலும் சடங்கும் இந்துசமயகலாசார முறைப்படி எவ்வாறு கொண்டாடப்படவேண்டும் என்பது தொடர்பில் கிழக்கிலங்கையின் பிரபல இந்துசமய விற்பன்னர் விஸ்வப் பிரம்ம ஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்களினால் விளக்கமளிக்கப்பட்டது .
களுவாஞ்சிக்குடி பிரதேசசெயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம், கௌரவ அதிதியாகக் கலந்துகொண்டார்.
குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய சிரேஸ்ட மாணவர்கள் கோமாதா பூஜை மற்றும் இந்துசமய சடங்குகள் தொடர்பில் நேரடியாக கண்டறியவும் விஸ்வப்பிரம்மஸ்ரீ வை.இ.எஸ்.காந்தன் குருக்களின் விளக்கவுரையை செவிமடுக்கவும் அழைக்கப்பட்டிருந்தனர்.
Post a Comment