0
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கொடூர ஆட்சியினை மாற்றிய பங்கு தமிழ் மக்களுக்கே அதிகம் உண்டு. 66 வருட காலமாக வடக்கு, கிழக்கு தமிழருக்கு கிடைக்காத உரிமைகளை பெற்றுக்கொடுக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு போராடிக் கொண்டிருக்கிறது. அதைவிடுத்து, பதவிகளை பெறுவதுக்காக அல்ல. அந்த உரிமையினைப் பெற்றெடுக்கும் வரை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பணி தொடர்ந்து கொண்டிருக்கும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார். 


தரம் 1க்கு மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்தில் திங்கட்கிழமை (19) அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு பேசுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில், கடந்த காலத்தை விட இப்பிரதேசதம் கல்வியில் பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. அதுவும், குறிப்பிட்ட காலத்துக்குள் ஏற்பட்டுள்ளது. கலைமகள் வித்தியாலயம் பல வருடமாக கல்வியில் பல சாதனைகளை நிலைநாட்டி வருகிறது. இது நாவிதன்வெளிப் பிரதேசத்துக்கு பெருமை தரும் விடயமாகும். தற்போது சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் கூட, கல்வியால் தான் முழுமையான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். 



நாங்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியவர்களாக இருந்தாலும், எங்கு சென்றாலும் தமிழ் மக்களின் கல்வி முன்னேற்றம் தொடர்பாகவே பேசுவோம்.  கடந்த காலங்களில் ஏனைய சமூகங்களைவிட எமது சமூகம் அனைத்துத்துறைகளிலும் முன்னோடிகளாக திகழ்ந்தார்கள். அது இன்று திட்டமிட்டமுறையில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இன்று கிழக்குமாகாண சபையிலே உறுப்பினர்களாக இருந்தாலும், நாங்கள் பாடசாலை நிகழ்வுகளில் கலந்துக்கொள்ள வேண்டும் என்றால்,  வலயக் கல்வி பணிப்பாளர், மாகாணக் கல்விப்பணிப்பாளர், ஆளுநரிடம் அனுமதி பெறவேண்டிய நிலை காணப்படுகின்றது. இது ஆரோக்கியமான நிருவாக நடவடிக்கைக்கு சிறந்ததல்ல. 



தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுள்ளோர் பச்சோந்திகளால் பழிவாங்கப்பட்டனர். ஆனால், இன்று  மாறும் நிலை வந்துள்ளது. இதனால் சந்தோசமாக இருக்கிறோம். 2012ஆண்டு கிழக்கு மாகாண சபைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சென்று அம்மாகாணத்தில் 11 உறுப்பினர்களைப் பெற்றது. 4 ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சியும் 7ஆசனங்களை முஸ்லிம் காங்ரஸிம் பெற்றிருந்தது. ஜனவரி மாதம் 8ஆம் திகதி மக்களின் ஆணையின்படி மஹிந்த அரசாங்கம் மாற்றியமைக்கப்பட்டது. அதன் பிற்பாடு கட்டம் கட்டமாக பல மாற்றம் இந்த நாட்டிலே ஏற்பட்டு வருகிறது. அராஜகம் ஒழிக்கப்பட்டு தர்மம் நிலைநாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலை நிலைக்க வேண்டும். தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்குத் தீர்வாக அமைய வேண்டும். அந்த எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றது.  



வடகிழக்கு தமிழர்களின் உரிமைப்பிரச்சனைக்கு சாதகமான பதில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. 13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுழ்படுத்தக் கூடிய சாதகமான பதிலை புதிய பிரதமர் வெளியிட்டு இருக்கிறார். அவ்வாறு உரிமைப் பிரச்சனை தீர்க்கப்படும் வரை எந்த அமைச்சுப்பதவியையும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பெறாது. 2012 ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாணசபை தேர்தலின் போது, மாகாண ஆட்சியை தமிழ்பேசும் மக்கள் வசம் வைத்திருப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸிடம் முதலமைச்சு மற்றும் அமைச்சுப் பதவிகளைத் தருவதாக கூறியிருந்தோம். ஆனால், சுகபோகத்துக்காக அதனை மறுத்து, அரசுடன் இணைந்து ஆட்சியமைத்து விட்டனர். ஆனால், இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க விரும்புகின்றனர். 



கிழக்கு மாகாணத்தில் 40 வீதம் தமிழ் மக்களும் 36 வீதம் முஸ்லிம்களும் வாழுகின்றனர். யுத்தத்தினால் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழுகின்றனர். திட்டமிட்ட விகிதாசாரத்தில் தமிழர்கள் திட்டமிட்டு குறைக்கப்பட்டு இருக்கின்றனர். பல சிக்கல்கள் இருந்தும் இந்த நாட்டு அரசுடன் எச்சந்தப்பத்திலும் இணைந்து செயற்படவில்லை. சிறுபாண்மை சமூகத்துக்காக குரல்கொடுக்கும் கட்சியாகவே இருந்துகொண்டிருக்கிறோம்.  2015 ஆண்டு தமிழ் மக்கள் கிழக்கு மாகாணத்தில் ஆட்சியினை நிறுவலாம் என முயற்சித்தபோது, முஸ்லிம் காங்கிரஸ் தங்களுக்கு அனைத்தையும் தரவேண்டும் என கேட்கின்றனர். இது எந்தவகையில் நியாயமாகும். 



தமிழத் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டிலே இல்லாவிட்டால், சிறுபான்மை சமூகம் இருக்கிறதா என்று கேள்வி கேட்கும் நிலை அனைவரிடத்திலும் வந்திருக்கும். தமிழர்களின் பிரச்சினை சர்வதேசம் வரை சென்றமையால் தான், இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டது. இல்லாவிடால் அவர்கள் இந்த நாட்டில் பாரிய அழிவுக்குட்பட்டிருப்பார்கள். இதேவேளை அநிதிகளைத் தட்டிக்கேட்கும் இனமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விளங்குகின்றது என அவர் தெரிவித்தார். 

இந்நிகழ்வில், ஆசிரிய ஆலோசகர் கே.சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top