0
இலங்கைக்கு நாளை செவ்வாயக்கிழமை 13ஆம் திகதி விஜயம் செய்யவுள்ள புனித பாப்பரசர் பிரான்ஸிஸின் விஜயத்தையொட்டி விசேட போக்குவரத்து ஒழுங்குகள்; மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சில பாதைகள் முற்றதாக மூடப்படவுள்ளதுடன் போக்குவரத்துக்காக அதிவேக நெடுஞ்சாலையை இந்த இரண்டுநாட்களுக்கு கட்டணமின்றி பயன்படுத்தலாம்  என பொலிஸ் ஊடகபேச்சாளரும் சிரேஷ்ட் பொலிஷ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில் நாளை செவ்வாய்க்கிழமை 13ஆம் திகதி காலை 9.45 மணியளவில் புனித பாப்பரசர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வருகை தரவுள்ளார். அவர், விமான நிலையத்திலிருந்து விசேட வாகன பவனியாக கொழும்புக்கு அழைத்துவரப்படுவார். விமான நிலையத்திலிருந்துது கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, கந்தானை, வத்தளை, நவலோக சுற்றுவட்டம், ஜப்பான் பாலம், இங்குருகொடை சந்தி, ஆமர் வீதிச் சந்தி, சங்கராஜ சந்தி, மருதானை சந்தி, பொரளை சந்தி, பேஸ்லைன் வீதி, கனத்தை சுற்றுவட்டம், பௌதாலோக்க மாவத்தை ஊடாக அப்போஸ்தலிக்க இல்லத்தினை வந்தடைவார்.பாப்பரசர் வருகை தரும்போது மேற்குறித்த வீதிகள் மூடப்பட்டிருக்கும். 

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு, புத்தளம் வீதிகளினூடாக இன்று 12ஆம் திகதி மாலை 6 மணிக்கு பின்னர் எந்தவொரு வாகனமும் செல்லமுடியாது. எனவே, வாகன சாரதிகள் அதற்கு பதிலாக அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தமுடியும. இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிமுதல் நாளை 13ஆம் திகதி நண்பகல் 12 மணிவரையான 18 மணித்தியாலங்களுக்கு அதிவேக வீதியில் செல்லும் வாகனங்களுக்கு கட்டணங்கள் எதுவும் அறவிடப்படமாட்டாது. 

அத்துடன் இந்த காலத்தில் அதிவேக நெடுஞ்சாலை சாதாரண போக்குவரத்து சாலையை போல செயற்படுவதுடன் ஏனைய நாட்களை போல 100 கிலோ மீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்த முடியாது. முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட சகல வாகனங்களும் அதிவேக வீதியில் 12ஆம் 13ஆம் திகதியில் பயணிக்கலாம். பாப்பரசரின விஜயத்துக்கு பாதுகாப்பு பணிகளில் 21ஆயிரம் பொலிஸார் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். மடு பிரதேசத்தில் 3ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொலிஸாரால் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு பணிகளுக்கு பொதுமகக்கள் தமது ஒத்துழைப்பை வழங்கவேண்டும். அத்துடன் காலி முகத்திடலில் 14ஆம் திகதி காலை 7 மணிமுதல் 12 மணிவரை நடைபெறும் விசேட ஆராதனையில் கலந்து கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள் 13ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி காலை 6.30 மணிக்கு முன் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். அத்துடன் பொதுமக்கள் முடிந்தளவு பொது போக்குவரத்துக்களான ரயில் மற்றும் பஸ் வண்டிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக காலி முகத்திடலில் சீ.சீ.டிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதுடன் அதனை 24 மணித்தியாலங்களும் கண்காணிக்கும் பணிகளில் பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் கூறினார். 

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top