0
சிறிலங்காவின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இன்றய தினம் திங்கட்கிழமை முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இந்தத் தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
புதிய ஜனாதிபதியின் அழைப்புக்கிணங்க இந்தச் சந்திப்பு இன்றய தினம் திங்கட்கிழமை சிறிலங்கா நேரப்படி நண்பகல் 12.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தலைமையில், அதன் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

ஜனாதிபதித் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதாகப் பகிரங்கமாகத் அறிவித்ததுடன், மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்குமாறும் தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள மக்களிடம் கேட்டுக்கொண்டது.
இந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடந்த 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கிலிருந்து 9 இலட்சத்து 78 ஆயிரத்து 111 வாக்குகள் கிடைக்கப் பெற்றன.
அதன் மூலம் புதிய ஜனாதிபதியாக கடந்த வெள்ளிக்கிழமை மைத்திரிபால சிறிசேன பதவியேற்றிருந்தார்.
சிறிலங்காத் தலைநகர் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் பங்கெடுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மைத்திரிபால சிறிசேனா விடுத்திருந்த அழைப்பிற்கு அமைய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் அந்த நிகழ்வில் பங்கெடுத்திருந்தனர்.
இந்த நிலையிலேயே புதிய அரசுடன் சந்திப்புக்கு வருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய ஜனாதிபதியின் நல்லெண்ண அடிப்படையிலான அழைப்பை கூட்டமைப்பினர் ஏற்றுக் கொண்டதாகவும், www.battifm.com இதன் பிரகாரம் ஜனாதிபதி மைத்திரிபாலவை நாளைய தினம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் கூட்டமைப்பினர் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளதாகவும் அதன் தலைவர் சம்பந்தன் தெரிவித்தார்.
புதிதாக அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தேசிய அரசில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு தொடர்பிலும், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாகவும், ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றியில் முக்கிய பங்காளியாக இருக்கும் கூட்டமைப்பினருக்கு நன்றி தெரிவிப்பதற்காகவுமே இந்தச் சந்திப்பிற்கு ஜனாதிபதி மைத்திரிபால அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதிக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top