உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுள்லா அவர்களால் இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபைக்கு தீயணைப்பு வாகனமும் தீயணைப்பு கப் வண்டி ஒன்றும் வழங்கப்பட்டதுடன் தீயணைப்பு பிரிவுக்கான புதிய மாடிக்கட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம். உதயகுமாரின் தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் அமைச்சர்களான அதாவுள்லா, முரளிதரன், மற்றும் ஜனாதியதியின் அலோசகர் சந்திரகாந்தன் ஆகியோரும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சாள்ஸ், பிரதி ஆணையாளர் என். தனஞ்ஜெயன், பொறியியலாளர் அச்சுதன், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என்போர் கலந்துகொண்டனர்.
முதலில் மாநகரசபை முன்றலில் அதிதிகள் வரவேற்கப்பட்டு, தேசிய கொடி ஏற்றிய பின்னர் புதிய தீயணைப்பு கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இடம் பெற்றது. பின்னர் வாகனங்கள் அமைச்சரால் மாநகர ஆணையாளருக்கு கையளிக்கப்பட்டது. இதன்பின்னர் மாநகர மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன.
கடந்த ஜூலை மாதம் மாநகர விருது வழங்கும் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட அமைச்சர் அவர்கள் வாக்குறுதியளித்ததற்கமைய நேற்று இவ் இரு வாகனங்களும் மாநகருக்கு வருகை தந்தன. அமைச்சரின் விசேட ஏற்பாட்டில் இவை மட்டக்களப்பு மாநகர சபைக்கு வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரேஒரு மாநகர சபையாகவிளங்கும் இங்கு ஏற்கனவே ஒரு தீயணைப்பு வாகனம் காணப்படுகின்றது. இதன் மூலம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இது சேவை புரிவது குறிப்பிடத்தக்கது. எனவே இதன் தேவை உணர்ந்து மற்றொரு வாகனமும் கட்டடமும் கிடைத்தமை மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் மாநகரிற்கும் பெரிதும் நன்மை பயக்கும் என்பதில் ஐயமில்லை.
Post a Comment