உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், 01 இல் கொண்டாடப்படும் சர்வதேச சிறார்கள் தினத்தைச் சிறப்பிக்கும் வகையிலான விசேட கொடி விற்பனை வைபவம் அண்மையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சின் கீழியங்கும் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இம்முறை “அன்புடன் எம்மைப் பாதுகாருங்கள்” என்ற வாசகத்தோடு தயாரிக்கப்பட்ட கொடிகள் மற்றும் ஸ்டிக்கர்களை நாடளாவிய ரீதியில் விநியோகிக்கும் வேலைத்திட்டத்தின் ஓரங்கமாக, ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவினால் ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள இக்கொடி விற்பனையினை பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
இதன்போது அவர் முதலாவது கொடி மற்றும் ஸ்டிக்கரைப் பெற்றுக்கொண்டு குறித்த விற்பனையை ஆரம்பித்துவைத்த நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. யசோதா கபிலன் பிரதேச செயலாளருக்கு கொடியை அணிவித்ததோடு, சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எஸ்.நிசாந்தினி, மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. எஸ்.எல்.சிபாயா றமீஸ் மற்றும் உளவள ஆலோசகர் ஏ.எம்.சப்றினா ஆகியோரும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இதில் கலந்துகொண்டனர்.
இவ்வருடம் குறித்த கொடி விற்பனைகள் மூலம் பெறப்படும் நிதியானது இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்குள்ளான சிறுவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தவும், சிறுவர் கழகங்களின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment