(எஸ்.பி.நாதன்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் மற்றும் செங்கலடிப் பிரதேசங்களைச் சேர்ந்த வருமானம் குறைந்த நிலையிலுள்ள 35 குடும்பங்களுக்கு ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் ( குழாய் நீர் இணைப்பை இலவசமாகப் பெற்றுக் கொள்ள கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.
ஆயிரம் 1000 பயனாளிகளுக்கு குழாய் நீர் இணைப்பை இலவசமாகப் பெற்றுக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் சனிக்கிழமை (11) ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பில் அமைந்துள்ள நிறுவன அலுவலகத்தில் ஸ்தாபகத் தலைவர் எஸ்.எம். அன்ஸார் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் உரையாற்றிய அதன் ஸ்தாபகத் தலைவர் எஸ்.எம். அன்ஸார் 'நகரப் புறங்களில் கிணறுகளிலிருந்து பெறப்படும் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதனால் சுத்தமான குடிநீரை வழங்கும் எமது திட்டத்தின் கீழ் வருமானம் குறைந்த குடும்பங்கள் பயனாளிகளாக தெரிவு செய்யப்படுகின்றார்கள்.
ஆயிரம் பேருக்கு இலவசமாக குழாய் நீர் இணைப்பைப் பெற்றுக் கொடுக்கும் எமது திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஏற்கெனவே 130 குடும்பங்களுக்கு இலவச குழாய் நீர் இணைப்புக்கள் வழங்கப்பட்டு விட்;டது.
இரண்டாம் கட்டமாக இப்பொழுது 35 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இலவச இணைப்பு என்பதால் நீரை வீண் விரயம் செய்து விடக் கூடாது. மிகச் சிக்கனமாக குடிநீர்த் தேவைக்கு மாத்திரம் பயனபடுத்திக் கொண்டால் மாதாந்தக் கட்டணத்தை குறைத்துக் கொள்ளலாம்;' என்றார்.
இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம். அலியார், சமூகத் தொண்டரும் பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான எம்.எஸ்.எம். நஸீர், நிறுவன அலுவலர்களான எம்.எச்.எம். சனூஸ் கே.எம். பதுறுஸ்ஸான், ஏ.எல். அப்துல் ஹபீல், ஏ. தாஹிர் நிறுவன செயலாளர் எஸ்.எல். ஜுனைட், ஆகியோரும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

Post a Comment