0
இம்முறை அகில இலங்கை பாடசாலை மாணவர்களிடையே இடம்பெற்ற தேசிய மட்ட விளையாட்டு விழாவின்போது மட்டக்களப்பு செட்டிபாளையம் மகா வித்தியாலய மாணவி பேரின்பராசா கோமுகி நீளம் பாய்தல் போட்டியில் மூன்றாமிடத்தினைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் ரி.அருள்ராஜா தெரிவித்தார்.

கடந்த வாரம் கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற்ற தேசிய மட்டப் போட்டியில் 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் கலந்து  கொண்டு 5.14 மீற்றர் தூரம் பாய்ந்து பி.கோமுகி தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தினைப் பெற்றுள்ளார்.


இம்மாணவி கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற தேசிய மட்டப் போட்டிகளின்போது 100 மீற்றர் தடை தாண்டற் போட்டியில் முறையே இரண்டாமிடத்தினைப் பெற்று வந்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற மாகாண மட்டப் போட்டியில் 100 மீற்றர் தடைதாண்டல், நீளம் பாய்தல், முப்பாய்ச்சல் ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று தொடர்ச்சியாக ஆறு வருடங்கள் இவர் சம்பியனாக இருந்த வருகின்றார்.

இம்முறை விளையாட்டுத் திணைக்களம் நடத்திய மாகாண மட்ட விளையாட்டு விழாவின்போது இம்மாணவி 100 மீற்றர் மற்றும் 400 மீற்றர் தடைதாண்டற் போட்டிகளில் முறையே 17:20, 1:17:20 ஆகிய நேரக்கணக்கில் ஓடி முடித்து மாகாண மட்டத்தில் புதிய சாதனையினையும் நிகழ்த்தியுள்ளதாகவும் இவரைப் பயிற்றுவித்த ஆசிரியர் ஏ.கருணாநிதிக்கும் இம்மாணவிக்கும் தமது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாகவும் அதிபர் ரி.அருள்ராஜா மேலும் தெரிவித்தார். 






Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top