கல்முனை மாநகர சபையின் பிக்கப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் சபையின் பிரதம கணக்காளர் எச்.எம்.எம்.றசீட் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை கல்முனையில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வாகனம் கந்தளாய் பிரதான வீதி வளைவொன்றில் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி குடைசாய்ந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் கணக்காளரும் சாரதியும் மேலும் நால்வரும் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அதேவேளை முன் ஆசனத்தில் அமர்ந்திருந்த கணக்காளரின் தலை, கால் போன்ற அங்கங்கள் படுகாயமடைந்துள்ளதால் அவர் ஆபத்தான நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு- பின்னர் பேராதெனிய வைத்தியசாலைக்கு விசேட சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் அறிவிக்கப்படுகிறது.
இந்த விபத்துச் சம்பவத்தைத் தொடர்ந்து மாநகர முதல்வர் நிஸாம் காரியப்பரின் அவசர உத்தரவின் பேரில் ஆணையாளரின் ஜே.லியாகத் அலி, முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் மற்றும் மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஷீர் ஆகியோர் ஸ்தலத்திற்கு விரைந்து சென்று தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதேவேளை கணக்காளருக்கான சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நிஸாம் காரியப்பர் வைத்தியசாலை உயர் அதிகாரிகளுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு உரையாடி வருகின்றார்.
இந்த விபத்துச் சம்பவத்தில் எமது கணக்காளர் றசீட் அவர்கள் படுகாயமடைந்திருப்பது குறித்து தான் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்திருப்பதாக முதல்வர் நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.
தற்போது தீவிர சிகிச்சைக்குட்படுத்தப்பட்டிருக்கின்ற அவர் விரைவில் குணமடைந்து வழமைக்கு திரும்புவார் என்ற நம்பிக்கையுடன் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்றும் முதல்வர் குறிப்பிட்டார்.
எமது சமூகத்தினதும் மாநகர சபையினதும் மிகப் பெரும் சொத்தான கணக்காளர் றசீட் அவர்களின் சுக நலனுக்காக அனைவரும் பிரார்த்திக்குமாறும் வேண்டிக் கொள்கின்றேன் எனவும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தள்ளார்
Post a Comment