0

(கிருஷ்மன்)

மட்டக்களப்பு தமிழகம் வாழ் தமிழ் மக்களே நீங்கள் எப்போது விழிக்கப்போகின்றீர்கள். மாற்றங்கள் ஏற்படும் என தமிழ்த்தேசியம் பேசி எமது வாழ்க்கை தத்தளிந்தது போதும். இனியாவது சிந்திதது செயலாற்றுங்கள்
என மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர கட்சியின் அமைப்பாளாரும் ஜனாபதியின் இணைப்பாளருமான அருண் தம்பிமுத்து அறைகூவல் விடுத்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் நேற்று (12) திறந்து வைக்கப்பட்ட அம்பாரை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் கோளாவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட தியாயப்பர் பாலாத்தை ஞாபகார்த்த மைதானத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையான பகுதி தமிழர்களின் தமிழகமாக திகழ்ந்து வருகின்றது.
தேசிய அரசியலில் இது வரை பார்வையாளர்களாக இருந்த இத்தமிழக தமிழ்மக்கள் பங்காளியாக மாற வேண்டும்.

அதனூடாக கிழக்கு மாகாணத்தில் பாரிய பொருளாதார மாற்றங்கள் ஏற்பட வேண்டும். அவ்வாறில்லையெனில் அடக்கப்பட்ட சமூகமாக நாம் வாழ்வதை யாரும் தடுக்க முடியாது என்றார்.

கடந்த காலங்களில் கிழக்கு மக்கள் எதிர்கட்சிக்கு வாக்களித்த போதிலும் அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை கைவிடவில்லை. யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் வீதிகள் பாலங்கள், கட்டடங்கள், தொழில் வாய்ப்புக்கள், வாழ்வாதார அபிவிருத்திகள் என பல்வேறு திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

இருந்தபோதிலும் ஆலையடிவேம்பு பிரதேசம் முறையாக அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதை உணர முடிகின்றது. இதற்கு தேசிய அரசியல் காரணமல்ல. உங்களால் பிரதிநிதித்துவப்படுத்தி அனுப்பி வைத்த அரசியல் தலைமைகளால் ஏற்பட்டது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

யாழ்ப்பாணத்தில் தொழிற்சாலைகள், தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளது. அதனூடாக ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர். அவ்வாறு கிழக்கிலும் உருவாக வேண்டும். அதற்காக அபிவிருத்தியை முன்னெடுக்கக்கூடிய தமிழர்களுக்கு ஏற்படும் அநீதிகளை தட்டிக்கேட்கும் தலைமையுள்ள தகுதியானவர்களை நீங்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்றார்.

இலங்கையில் தமிழ் அமைச்சர்கள் இருவர் மாத்திரமே. ஒருவர் டக்ளஸ் தேவானந்தா, மற்றயவர் ஆறுமுகம் தொண்டமான்.

ஏனைய சமூகங்களில் எத்தனை அமைச்சர்கள் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.. அவர்கள் ஊடாக அச்சமூகங்கள் அடைந்துள்ள அபிவிருத்தியை பாருங்கள். ஆகவே எதிர்வரும் தேர்தலிலாவது நமது மக்கள் இவற்;றை உணர்ந்து வெற்றி பெறவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு வாக்களித்து அதனூடாக நம் வாழ்வை வளப்படுத்த ஒன்று படுவோம் என கேட்டுக் கொண்டார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top