இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட விஞ்ஞானி கலாநிதி பரஞ்சோதி ஜெயக்குமார் அமெரிக்காவை மையமாகக் கொண்ட முன்னணி பொறியியல் அமைப்பின் உயர் விருதைப் பெறவுள்ளார்.
பல்வேறு கைத்தொழில்கள் சார்ந்த பொறியியலாளர்களை தர நிர்ணயப்படுத்தும் SAE International என்ற அமைப்பு, கலாநிதி ஜெயக்குமாருக்கு Arch T. Colwell கூட்டுறவு பொறியியல் விருதை வழங்கி கௌரவிக்கவுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையில் டெட்ரொயிட் நகரில் நடைபெறும் SAE 2015 உலக மாநாட்டில் அவர் தமக்குரிய விருதைப் பெறுவார்.
SAE International ஆனது 1979ஆம் ஆண்டு தொடக்கம் Arch T. Colwell கூட்டுறவு பொறியியல் விருதை வழங்கி வருகிறது. தமது தொழில்நுட்பக் குழுக்களின் கீழ் கூட்டான ஆய்வின் மூலம் பொறியியல் துறையின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடிய நியமங்களை உருவாக்கல், தொழில்நுட்ப அறிக்கைகளை வரைதல், தரவுகளைத் திரட்டுதல் முதலான பணிகளில் பங்களிப்பு நல்கியவர்களை பாராட்டி கௌரவிப்பது விருதின் நோக்கமாகும்.
கலாநிதி ஜெயக்குமார் அமெரிக்க இராணுவத்தின் கனரக தன்னியக்க பொறிகள் ஆய்வு மற்றும் பொறியியல் நிலையத்தில் (TARDEC) சிரேஷ்ட ஆய்வு விஞ்ஞானியாக பணியாற்றுகிறார். இந்த வேலையில் இணைந்து கொள்வதற்கு முன்னர், அவர் Ford Motor Company உள்ளிட்ட பல உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களில் வேலை செய்தவர்.
சஞ்சிகைகள் மற்றும் மாநாடுகளுக்கான ஆய்வுக் கட்டுரைகள் உள்ளிட்ட நூற்றிற்கு மேற்பட்ட தொழில்நுட்ப ஆக்கங்களை எழுதிய பெருமை கலாநிதி ஜெயக்குமாரை சாரும். இவர் வாகனப் பொறிமுறை பற்றி எழுதிய கட்டுரையொன்று தேசிய பாதுகாப்பு கைத்தொழில் சங்கத்தின் வாகன பொறியியல் மற்றும் தொழில்நுட்ப மாநாட்டில் சிறந்த கட்டுரைக்கான விருதை வென்றது.
கலாநிதி ஜெயக்குமார் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதற்தரத்திலான கௌரவ பொறியியல் விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றவர் ஆவார். அவர் கெல்ரெக் பல்கலைக்கழகத்தில் கௌரவ கலாநிதி பட்டத்தையும், முதுவிஞ்ஞானமாணி பட்டத்தையும் பூர்த்தி செய்திருந்தார்.
Post a Comment