மட்டக்களப்பு புதுக்குடியிருப்பிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலையில், இலவச கொரிய வைத்தியமுகாம் புதன்கிழமை (19) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 69ஆவது பிறந்த தினத்தையொட்டி உற்பத்திதிறன் ஊக்குவிப்பு அமைச்சு மற்றும் கொரிய சர்வதேச கூட்டுத்தாபனமும் கிழக்கு மாகாண சுதேச ஆயுர்வேத திணைக்களமும் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
இதன் ஆரம்ப நிகழ்வு, பட்டிருப்பு தொகுதி ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் சாணக்கியன் இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், உற்பத்தி திறன் ஊக்குவிப்பு அமைச்சர் பஸீர் சேகுதாவூத் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதிகளாக, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் கொரிய சர்வதேச கூட்டுத்தாபனத்தின் ஆலோசகர் டாக்டர் கியூ, மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் எஸ்.சதுர்முகம், கிழக்கு மாகாண சுதேச ஆயுர்வேத திணைக்களத்தின் பணிப்பாளர் டாக்டர் திருமதி. ஆர்.ஸ்ரீதர், மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் அனுர பண்டார ஹக்மன உட்பட பலர் கலந்துகொண்டனர்.
சகல விதமான நாள் பிந்திய மற்றும் குறுகிய கால நோய்களுக்கு இவ்வைத்திய முகாமில் பல்வேறு சிகிச்சை முறைகளில், சிகிச்சையளிக்கப்படவுள்ளது. கொரிய மற்றும் இலங்கையின் வைத்தியர்கள் இச்சிகிச்சை முகாம்களை நடாத்தி வருகின்றனர்.
காலை 9.00 மணி முதல் பிற்பகல் 4.00 மணிவரையில் நடைபெறும் இவ்வைத்திய முகாமானது, வியாழக்கிழமை (20) வரையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.
மூன்று தினங்களைக் கொண்டதாக நடாத்தப்பட்டு வரும் இலவச கொரிய வைத்திய முகாமானது செவ்வாய்க்கிழமை (18) ஏறாவூரில் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment