0
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கி 18 ஆவது திருத்தத்தை இல்லாதொழித்து நாட்டை புதுயுகத்துக்கு கொண்டுச் செல்வேன் என தெரிவித்த அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நானே பொதுவேட்பாளராக போட்டியிடுவேன் எனவும் தெரிவித்தார்.
கொழும்பு புதிய நகர மண்டபவத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமான செய்தியாளர் மாநாட்டின் போதே மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன்
47 வருட அரசியலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 13 வருடங்களாக சுகாதார அமைச்சராக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளேன். எனது அமைச்சில் செய்ய வேண்டிய அனைத்து சேவைகளையும் செய்துள்ளேன். இதை மக்கள் நன்கு அறிவர். நான் சுகாதார அமைச்சராக பதவியேற்ற போது பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேணையில் நாட்டில் புகையிலை பாவனையாளர்களின் பாவனை வீதம் 80 ஆக இருந்தது. ஆனால் தற்போது அதனை 60 வீதமாக குறைத்துள்ளேன். 
சிறிதளவும் நினைக்கவில்லை
நான் அரசாங்கத்துடன் அதுவும் ஒரு அமைச்சின் செயலாளராக இருக்கும் போது என்னை பொதுவேட்பாளராக நியமிப்பார்கள் என நான் சிறிதளவும் நினைத்து பார்க்கவில்லை. 
உயிரை தியாகம் செய்ய தயார்
நான் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு போகும் போது எனது பிள்ளைகள் மற்றும் மனை ஆகியோர் என்னிடம் கேள்வி கேட்பர். 'அப்பா நீங்கள் கட்சியின் செயலாளராக இருந்தும் உங்களுக்குள் மனதுக்குள் கவலை ஒன்று மறைந்து இருக்கின்றது. நீங்கள் இந்த நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாங்கள் உங்களுக்காக உயிரையும் கொடுக்க தயாராக இருக்கின்றோம்'. எனது பிள்ளைகளே இவ்வாறு கூறும் போது நான் மக்களுக்கு சேவை செய்ய உயிரையும் துச்சமாக எண்ணுகின்றேன். 
மாற்றங்கள் தேவை
இந்த நாட்டில் பல மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. நாம் அனைவரும் ஒரு குடும்பமாக இணைந்து இந்த நாட்டினை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.இதற்காக நான் எதை வேண்டுமானாலும் இழக்க தயாராகவுள்ளேன்.  
 நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பேன்
1978 ஆம் ஆண்டில் இருந்து சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை சீரழித்துக்கொண்டிருக்கும் 18 ஆவது திருத்தை இல்லாமல் செய்து நிறைவேற்று அதிகராத்தையும் இல்லாமல் செய்வேன். நாட்டிவ் மக்கள் சுதந்திரமாக வாழமுடியாத நிலை காணப்படுகின்றது. அபிவிருத்தி, நிவாரணங்கள் அதிகமாக இருந்தாலும், கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் பாவனை என நாசக்கார வேலைகள் அதிகரித்துள்ளன. இவற்றுக்கு முற்று புள்ளி வைக்க நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதியை நிறைவு செய்ய வேண்டும். உங்கள் வாக்குகளால் என்னை வெற்றி பெற செய்தால் 100 நாட்களுக்குள் இந்த ஆட்சிமுறைமையை இல்லாதொழிப்பேன் என்றார்.
பிரதமராக ரணில்
நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் எனது ஆட்சியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்படுவார் என உறுதியாக கூறுகின்றேன். எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காகவும் தனது கட்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒருவர். உண்மையில் நான்பொதுவேட்பாளராக தெரிவு செய்யப்பட்டமைக்கு எனது முழுமையான நன்றிகைள அவருக்கு தெரிவித்துகொள்கின்றேன்.
சர்வதிகார குடும்ப ஆட்சி
18 ஆவது திருத்தின் மூலம் அரசாங்கம் ஆட்சி செய்து நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்கின்றது. இதனால் நாடு சர்வதிகார ஆட்சியை நோக்கி பயணித்துகெண்டிருக்கின்றது. இது எமக்கு விருப்பம் இல்லை. ஜனநாயக நாட்;டில் அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும். ஆனால் குடும்;ப ஆட்சியின் மூலம் நாடு சர்வதிகாரத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கின்றது.
எனக்கு அழுத்தங்கள் இருந்தன
நான் அமைச்சராக பதவி வகித்த காலத்தில் பாரிய அழுத்தங்களை எதிர்நோக்கியிருந்தேன். அமைச்சராக பதவி வகித்த போது எனக்கு இவ்வளவு அழுத்தங்கள் என்றால் சாதாரண நாட்டு மக்கள் எவ்வாறான அழுத்தங்களையும் கஸ்டங்களையும் எதிர்நோக்கியிருப்பர் என எனது குடும்ப உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
 சுதந்திரமற்ற பொலிஸ் சேவை
நாட்டில் முப்படை மற்றும் பொலிஸ் சேவை ஆகியன சுதந்திரமற்ற நிலையில் காணப்படுகின்றன. தமது தொழிலை சுதந்திரமாக செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. குறிப்பாக துஷ்பிரயோகங்களை செய்துகொண்டு அதிகாரத்தில் இருப்பவர்களை கண்டிக்க முடியாமல் உள்ளது. இதனை மாற்றியமைக்க வேண்டும். நான் இந்த நேரத்தில் சொல்ல விரும்புவது என ஆட்சியில் முப்படை மற்றும் பொலிஸ் சேவை ஆகியன சுதந்திரமாக செயற்பட இடமளிப்பேன் என்பதை உறுதியாக கூறுகின்றேன்.
முப்படை தளபதிகளுக்கு வேண்டுகோள்
பொதுவேட்பாளராக போட்டியிடும் நான் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் முப்படை தளபதிகள் ஆகியோரிடம் வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். நீங்கள் யாருக்கும் அடிப்பணிய வேண்டாம். சுதந்திரமாகவும் சமத்துவமாகவும் செயற்படுங்கள். தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள உங்கள் ஆதரவு முக்கியம். 
ஊடக சுதந்திரம்
ஊடகவியலாளர்களுக்கு சுதந்திரமாக கருத்து வெளியிட இந்த நாட்டில் சந்தர்ப்பம் இல்லை என்பது எமது சகோதர ஊடகவியலாளர்களுக்கு தெரியும். ஊடக சுதந்திரம் புதைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்படும் என உறுதியளிக்கின்றேன். ஊழலை முடிவுக்கு கொண்டு வந்து நியாயமான சமூகத்தை கட்டியெழுப்ப எதிர்பார்த்துள்ளேன்.
பொறுத்துகொண்டிருக்க முடியவில்லை
நாம் அமைச்சர்களாக பதவியேற்கும் போது பல கோரிக்கைகள் மற்றும் நிபந்தனைகளுடனேயே பொறுப்பேற்றோம். ஆனால் இந்த குடும் ஆட்சியை பார்க்கும் போது நாடு சர்வதிகாரத்தை நோக்கி பயணித்துகொண்டிப்பது தெளிவாக விளங்கியது. இதனையடுத்தே நாட்டை புது யுகத்துக்கு கொண்டுச் செல்லும் முகமாக வேட்பாளராக களமிறங்க தீர்மானித்தேன்.
அரசாங்க,தனியார் துறை ஊழியர்கள் ஏமாற்றப்பட்டனர்
அரசாங்க ஊழியர்கள் கடந்த பல வருடங்களாக ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர். குறிப்பாக இவர்களுக்கான சம்பள உயர்வு வழங்கப்படாது ஏமாற்றப்பட்டனர். இதேபோன்றே தனியார்துறை ஊழியர்களும் ஏமாற்றப்பட்டுள்ளனர். தற்போது வாழ்க்கையை கொண்டுச் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்த நிலைமையை எனது ஆட்சியில் மாற்றியமைத்து புது யுகத்தை ஏற்படுத்துவேன்.
அனைவருக்கும் நன்றி
எனது இந்த பயணத்திற்காக உதவிய சகோதர அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ரத்ன தேரர், சோபித தேரர் உட்பட அனைவருக்கும் கௌரவமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவையும் மறந்து விட முடியாது.
எதிர்வரும் தேர்தல் வெற்றிக்காக நாளுக்கு நாள் நாங்கள் அடியெடுத்து வைப்போம். மக்களின் பிரார்த்தனை நிறைவேற அர்ப்பணிப்போம். ஜனாதிபதித் தேர்தலில் நாட்டு மக்களின் கௌரவமான வாக்குகளில் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன் என மைத்திரிபால சிறிசேன  மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top