சிட்னி: ஆஸ்திரேலிய முதல்தர கிரிக்கெட் போட்டியின் போது தலையில் பந்து பலமாக மோதியதால் படு காயமடைந்த இளம் கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
நேற்றுமுன் தினம் நியூ சவுத் வேல்ஸில் நடைபெற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷேன் அபாட்டின் பந்து, பிலிப்பின் தலையில் பலமாக தாக்கி விட்டது. இதனால் படுகாயமடைந்து நிலை குலைந்து கீழே விழுந்தார் ஹியூக்ஸ். தலையில் ரத்தம் சொட்டச், சொட்ட சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருந்தது.
இரண்டு நாட்களாக கோமாவில் இருந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹியூக்ஸ் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார்.
25 வயதேயான பிலிப் ஹியூக்ஸ் ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளிலும், 25 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிலிப் ஹியூக்ஸின் மரணம் கிரிக்கெட் உலகை மட்டுமல்லாமல், விளையாட்டு உலகையும் உலுக்கியுள்ளது. ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். பல நாட்டு வீரர்கள் ஹியூக்ஸுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்நிலையில் ஹியூக்ஸ் அணிந்திருந்த ஹெல்மெட்டின் மோசமான வடிவமைப்புதான் அவருடைய உயிரிழப்பிற்கு முக்கிய காரணம் என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. வருகின்ற 30 ஆம் தேதி, அதாவது இன்னும் இரு தினங்களில் ஹியூக்ஸின் பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment