"நானும் என் கணவரும் கல்யாணம் முடித்த காலத்தில் இருந்தே இந்தத் தோட்டத்தில் வேலை செய்தோம். மண் சரிவு வருமென்று வேறு இடத்தில் வீடு கட்டுவதாகச் சொன்னார்கள். எங்களுக்கும் வீடு கட்டினார்கள். ஆனால், வீடு கட்டி முடிந்ததும், நீங்கள் தோட்டத்தில் வேலை இல்லாதவள் என்றுகூறி, எங்கள் வீட்டை வேறு நபர்களுக்குப் பெற்றுக்கொடுத்துவிட்டார்கள்.
எங்களுக்கு இரண்டு மகன்மார் இருக்கிறார்கள். இருவரும் தோட்டத்தில் வேலை இல்லை.
படித்துவிட்டு வேறு வேலை செய்கிறார்கள். இருவருக்கும் வீடு வேண்டும் என்பதற்காகப் பெயர் கொடுத்திருந்தோம். அதன்படி எங்களுக்குக் காணி ஒதுக்கப்பட்டு வீட்டை நிர்மாணித்தார்கள். என் சொந்தப் பணத்தில்தான் அத்திவாரம்கூடப் போட்டார்கள். ஆனால், இறுதியில் எமக்காகக் கட்டப்பட்ட வீட்டைப் பறித்து, தோட்டத்தில் வேலை செய்யும் நபருக்குக் கொடுத்துவிட்டார்கள். தோட்டத்துரையிடம் (மேற்பார்வையாளர்) கேட்டபோது, 'நீ தோட்டத்தில் வேலை இல்லாதவள்! வாயை மூடு' என்று சொல்லிவிட்டார்".
மீரியபெத்தை தோட்டத்திற்காகச் சுமார் 37 ஆண்டுகள் உழைத்து உருக்குலைந்த வேலம்மா என்ற தாயின் கண்ணீர் கதையிது. தோட்ட நிர்வாகம் சரியாகச் செயற்பட்டிருந்தால் தமக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்கிறார் அவர்.
மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கியிருந்தவர்களுக்குப் புதிய வீடுகளை அமைப்பதற்குத் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தபோது, தோட்டத்தில் வேலைசெய்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.
கடன் அடிப்படையில் வீடு நிர்மாணித்துக்கொடுக்கப்பட்டதால், கடனை அறவிடுவதற்கு வசதியாக தோட்டத்தில் வேலை செய்தவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது தோட்ட நிர்வாகத்தின் பக்க நியாயமாக இருக்கலாம்.
அவ்வாறென்றால், வேலை செய்யாதவர்கள் மண்ணில் புதையுண்டுப்போவதா? என்பது மக்களின் கேள்வி!
"எங்களுக்காகக் கட்டப்பட்ட வீட்டை வேறு ஆட்களுக்குக் கொடுத்ததன் பின்னர், எமக்குக் காணியை மட்டும் வழங்கினார்கள். அதற்கு மாதா மாதம் வீடமைப்பு அதிகார சபைக்கு 2500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றார்கள். நான் இதுவரை முப்பதினாயிரம் கட்டியிருக்கிறேன். எமக்கு வீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக, ஹல்தும்முல்லையைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதிக்கு இருபதினாயிரம் கொடுத்திருக்கிறேன். உங்கள் படிப்பின் மீது ஆணையாகச் சொல்கிறேன். நான் சொல்வதைக் கேளுங்கள்"
மீண்டும் கண்கள் குளமாக உண்மையைப் பிட்டு வைக்கிறார் வேலம்மா. அருகில் இருந்த பிராஜா சக்தி பணியாளர்களுக்கு ஆச்சரியம்!.
மீரியபெத்தையில் வேலம்மாவிற்கு மட்டும்தான் இந்த நிலை என்று பார்த்தால், பல வேலம்மாக்கள் இருக்கிறார்கள். எல்லோருடைய கதையும், நிலையும் அப்படித்தான் இருக்கிறது.
வீடுகளை நிர்மாணிக்க ஆரம்பித்தபோது மீரியபெத்தைக்குப் பொறுப்பாகவிருந்த உதவி மேற்பார்வையாளர்கள் (சின்னதுரைமார்) மாறி மாறி வந்ததாகவும் அவர்கள் சரியாக இந்த விடயத்தைக் கையாளவில்லை என்றும் குடியிருப்பாளர்கள் சொல்கிறார்கள்.
முதலில் வேலை செய்யாத ஒருவருக்கு வீட்டை நிர்மாணித்து, பின்னர் அந்த வீட்டைத் தோட்டத்தில் வேலை செய்பவருக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறார்கள். சிலர் வீட்டைப் பெறுவதற்காக நிர்வாகத்தின் பணிப்பின்படி, வீடமைப்பு அதிகார சபையில் ஒரே தடவையில் இருபதினாயிரம் ரூபாய் செலுத்திப் பற்றுச் சீட்டும் வைத்திருக்கிறார்கள். பின்னர் அந்த இருபதினாயிரத்தை வேறொருவர் செலுத்தி வீட்டைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண் டிருக்கிறார்.
தோட்டத்தில் எல்லோருக்கும் தெரிய, ஒரு வேலம்மாவிற்காக வீடு நிர்மாணிக்கப்படுகிறது. பின்னர் அந்த வீடு செல்லம்மாவிற்குக் கைமாறுகிறது. அப்போது வேலம்மா தம் வீட்டை செல்லம்மாவிற்கு விற்றுவிட்டதாக ஏனையவர்கள் நினைத்துக்கொள்கிறார்கள். கட்டிய வீட்டை விற்றுவிடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இப்படித்தான் எழுந்திருக்கிறது!
"ஐயோ! தோட்டத்தில் யாரும் வீடுகளை விற்கவில்லை. தோட்ட நிர்வாகமே ஒருவரின் வீட்டை இன்னொருவருக்கு வாங்கிக்கொடுக்கிறது. அந்த உண்மை தெரியாதவர்கள், அப்பாவி எங்களைத் தவறாக நினைக்கிறார்கள்" என்பது மக்களின் அழுத்தமான நிலைப்பாடு.
தோட்டத் தொழிலாளர்களின் லயன் அல்லது லயின் என்னும் வரிசை வீடுகளை மாற்றியமைக்க வேண்டும் என்று பல தரப்பினரும் இப்போது குரல் கொடுத்துவருகிறார்கள். ஆங்கிலேயர்கள் தோட்டங்களை உருவாக்கிய காலத்திலிருந்து இற்றைவரை நான்கு தலைமுறைக் காலம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து ஒரு லயின் குடியிருப்பு சுமார் நுற்றைம்பது குடும்பங்களை உருவாக்கியிருக்கிறது. அந்த நூற்றைம்பது குடும்பங்களுக்கும் அந்த ஒற்றை லயின்தான் நிரந்தர இருப்பு.
தற்போது நான்காவது தலைமுறையைச் சேர்ந்த ஒரு சில குடும்பங்கள்தான் தோட்டத்தில் வேலை செய்கின்றன. இங்கே வேலம்மா மூன்றாவது தலைமுறை. வேலை செய்து ஓய்வு பெற்றுவிட்டார். அவரோடு அவரின் குடும்பம் தோட்ட வேலைக்கு விடைகொடுத்துவிட்டது. இனி, இரண்டு மகன்மாரும் மலையகம் எனும் தங்களுக்கான இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றால், மீரியபெத்தையில் புதையுண்ட வீட்டிற்குப் பதிலாகப் புதிய வீட்டைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
வேலம்மாவிற்கு இரண்டு பிள்ளைகள். சில குடும்பங்களில் நான்கைந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் தோட்டத்தில் வேலை செய்வதில்லை. திருமணம் முடித்துத் தனித்தனிக் குடும்பங்களாக இருந்தாலும், தோட்டத்தில் வேலை செய்யும், அல்லது ஓய்வுபெற்றிருக்கும் தாயினதோ, தந்தையினதோ பெயரில் இருக்கும் லயின் குடியிருப்பில் தங்கள் பெயர்களையும் பதிவுசெய்துகொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு லயின் குடியிருப்பு பல குடும்பங்களை உருவாக்கியது மட்டுமல்லாது, பல குடும்பங் களுக்கான இருப்பையும் தன்வசம் வைத்திருக்கிறது.
என்றாலும் அதில் உருவான பலர் லயத்து வாழ்க்கைக்கு விடைகொடுத்துவிட்டு வெளியில் வந்திருக்கிறார்கள். வர்த்தகர்களாக, ஆசிரியர்களாக, இன்னபிற தொழில்களைச் செய்பவர்களாக அவர்கள் வெளியில் வந்துவிட்டதால், மலையகத்தில் அவர்களின் இருப்புக்கான அடையாளத்தையும் இழந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
தாங்கள் பிறந்து வாழ்ந்து வளர்ந்த லயின் குடியிருப்பு தற்போது அவர்களுக்குச் சொந்தமாக இல்லை. நான்காவது தலைமுறையைச் சேர்ந்த யாரோ ஒருவர்தான் அதில் குடியிருக்கிறார். இந்த நிலையில்தான் லயின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சிலர் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
மலையகப் பகுதியில் இருந்து கல்வி கற்று கொழும்புக்கு வந்து தொழில் புரிந்துகொண்டிருந்த ஒருவரை எல்லோரும், அவரை மலையகம் - மலையகம் என்று சொல்வார்கள். ஒரு நாள், களுத்துறைப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது அவரைச் சந்திக்கக்கிடைத்தது. உங்களின் சொந்த ஊர் எது என்று கேட்டேன். எல்லோரும் என்னை மலையகம் என்கிறார்கள். நான் பிறந்தது கொட்டகலை கல்மதுரை தோட்டம். ஆனால், எமக்கு அங்கு எந்தத் தொடர்பும் கிடையாது.
எல்லோரும் கொழும்பில் இருக்கிறோம். நான் மலையகம் என்று சொல்வதற்கு எனக்கு எந்த இருப்பும் அங்கு இல்லையே! என்றார் கவலை யுடன். இப்படி ஆயிரக்கணக்கான குடும்பங்களின் இருப்பு தோட்டத்தில் இருந்து வேருடன் பிடுங்கப்பட்டு வேறு வேறு இடங்களில், மலைய கத்திற்கு உள்ளேயும் வெளி மாவட்டங்களிலும் வெளி நாடுகளிலும் நிரந்தரமாக நாட்டப்பட்டிருக் கிறது. அதேநேரம் மலையகம் என்றால், வெறும் லயின் குடியிருப்புகளும், தேயிலைத் தோட்டங் களும்தான் என்று சிலர் அப்பாவித்தனமாக எண்ணிக்கொண்டும் இருக்கிறார்கள்.
அது தவறு என்பதை நமக்கு மீரியபெத்தை தோட்டம் கற்றுத்தருகிறது. தோட்டத் தொழிலில் இருந்து எவ்வாறு இளந்தலைமுறையினர் விலகிச் செல்கிறார்களோ, தோட்டமும் சிறிது சிறிதாகக் காணாமற்போய்க்கொண்டிருக்கிறது.
மீரியபெத்தையை நிர்வாகிக்கும் அம்பிட்டிக்கந்தை தோட்டத்தில் இதுவரை மூன்று தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று மீண்டும் விரைவில் தொழிற்படவிருப்பதாக அறியமுடிகிறது. மற்றொன்று இடம்பெயர்ந்தவர்களுக்கான இடைத்தங்கல் முகாமாக மாறியிருக்கிறது. தேயிலைப் பரப்பு தேய்ந்து வருகிறது. பதிலாக வேறு வேறு பயிர்ச்செய்கைகளில் ஈடுபடுவதில் நிர்வாகத்தின் கவனம் திரும்பியிருக்கிறது.
பாதைகள் நிலைமை சொல்லவும் வேண்டாம். தோட்டங்களில் தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் பாதைகளும், தோட்டத் தலைமை அலுவலகம், நிர்வாகியின் வாசஸ்தலம் ஆகியவற்றுக்குச் செல்லும் பாதைகளும் மிக நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டு வருவதைப் பல தோட்டங்களில் காணலாம். குறைந்தபட்சம் தலைமை அலுவலகம், அதிகாரிகளின் வாசஸ்தலத்திற்குச் செல்லும் பாதைகளாவது சிறந்து காணப்படும். எங்குப் பார்த்தாலும் பச்சைப் பசேல் எனத் தேயிலைத் தோட்டங்கள் காணப்படும். இணையத்தளங்களைத் தட்டினால், இப்படியான படங்களைப் பார்க்க முடியும்.
ஆனால், அம்பிட்டிகந்தை தோட்டம் அதற்கு மாறானதாகவே இருக்கிறது. இதற்குக் காரணம் தோட்ட நிர்வாகத்தின் முறையற்ற பராமரிப்பா? என்று கேட்கலாம். தோட்டத்தில் வேலை செய்வதற்குத் தொழிலாளர்கள் இல்லை என்றால் நிர்வாகத்தால் என்ன செய்ய முடியும்? "முன்னரெல்லாம் தேயிலைச் செடியைத்தம் பிள்ளைகள்போல் நினைத்துப் பராமரிப்பார்கள். இப்போது அந்தப் பற்றுதல் கிடையாது. தோட்டத் தொழிலை வேண்டா வெறுப்பாகத்தான் செய்கிறார்கள்" என்கிறார் மாரிமுத்து. இந்தநிலை மீரியபெத்தையில் மாத்திரமல்ல. மலையகத்தின் பெரும்பாலான தோட்டங்களின் நிலையும் இப்படித்தான் மாறி வருகிறது என்கிறார் மாரிமுத்து.
தோட்ட நிர்வாகங்கள் தோட்டத்தில் தொழில் செய்பவர்களுக்கு ஏன் முக்கியத்துவம் வழங்குகிறது என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்!
நிர்வாகம் மாத்திரமல்ல. தோட்டத்தில் தொழில் செய்யா தவர்களால் தொழிற்சங்கங்களுக்கும் என்ன நன்மையிருக்கிறது? என்ற நியாயமான கேள் வியும்கூட எழலாம். தொழில் செய்யாதவர் களிடமிருந்து அங்கத்துவப் பணத்தை மட்டுமே வசூலிக்க முடியாது. ஆனால், வாக்குகளைப் பெறலாமே! என்று நினைப்பீர்கள்! சிலருக்கு இந்த வாக்குப் பதிவு விடயத்திலும் அக்கறை கிடையாது என்கிறார் தோட்டத்தில் அனுபவம் நிறைந்த மாரிமுத்து.
தோட்டத்தில் தொழில் புரிந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, அங்குள்ள மக்களின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பையும் தோட்ட நிர்வாகியே வகித்து வருகிறார். தேசிய அடையாள அட்டைக்கு அத்தாட்சிப் படுத்திக்கொடுக்கும் பொறுப்பு முதல், சகலவற்றையும் நிர்வாகியே கொண்டிருக்கிறார். அதனால், நிர்வாகியையும் தொழிற்சங்கக் கிளைத் தலைவர்களையும் தொழிலாளர்கள் இன்னமும் தெய்வங்களாகவே கருதுகிறார்கள் போலும்.
மண்சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகளைக் கண்டுகொண்டுள்ளபோதிலும், அதுபற்றித் தமக்குத் தோட்டத்தின் துரையோ (மேற்பார்வையாளரோ) அல்லது தோட்டத் தலைவரோ வந்து சொல்லவில்லை என்று சிலர் நொந்துகொள்வதிலிருந்து இது புலனாகிறது. என்றாலும் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ததாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இப்படி எல்லாமே தோட்ட நிர்வாகியால் நடந்தாகவேண்டும் என்றிருந்த மக்களை மாவட்டச் செயலாளர் தம் பொறுப்பில் எடுத்திருப்பது தோட்ட வாழ் மமக்களுக்கு நிம்மதியைத் தந்திருப்பதாக் சொல்கிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கு வது, பராமரிப்பது, தேவையான வசதிகளைப் பெற்றுக்கொடுப்பது இவை அனைத்தையும் மாவட்டச் செயலாளரே ஏற்றுச் செயற்படுத்தி வருகிறார். இது விடயத்தில் தோட்ட நிர்வாகம் தார்மீகக் கடமைகளை நிறைவேற்றினாலும், தற்போது அந்த மக்களுக்கான எதிர்காலத்தை அரச நிர்வாகியான மாவட்டச் செயலாளர் ஏற்றிருப்பது வரவேற்கப்படுகிறது. பண்டாரவளை, வெலிமடை, ஹல்தும்முல்லை பிரதேச செயலாளர்களும் இணைந்து செயற்படுவதுடன், இராணுவத்தினரின் நேர்த்தியான முகாமைத்துவத்திற்குப் பல்வேறு அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைத்து வருகின்றன. இவர்களுடன் பிரஜா சக்தி பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களான தேவநாயகம், ஜோர்ஜ் ஸ்டீபன், நிஷாந்தன், விஜயகுமார் முதலானோர் தம் மக்களுக்கான சேவையை நேரடியாக வழங்க முடிந்துள்ளமை திருப்தியளிப்பதாகச் சொல்கிறார்கள்.
இப்போது மீரியபெத்தையில். மண்ணில் புதையுண்ட லயின் வீடுகளுக்குப் பதிலாகப் புதிய வீடுகள் அமைக்கப்படவிருக்கின்றன. அந்த வீட்டில் இருந்த, அல்லது பதிவு செய்திருந்த குடும்பங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப எதிர் காலத்தில் வீடுகள் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் இன்றைய தினம் 57 குடும்பங்கள் தொழிற்சாலைக்கு மாற்றப்பட்டு விடுவார்கள். ஏனையவர்கள் பூணாகலை பாடசாலையிலிருந்து மீண்டும் சொந்த இடம் சென்ற போதிலும், அவர்களை அங்குக் குடியிருக்க வேண்டாம் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியிருக்கிறார்கள். எனவே, 247 குடும்பங்கள் மீண்டும் பாடசாலைக்கே வந்துவிட்டார்கள். இதனால், 57 குடும்பங்களைத் தொழிற்சாலைக்கு மாற்றும் நடவடிக்கை பிற்போடப்பட்டிருக்கிறது.
எவ்வாறாயினும் தம்மை நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்ற குடியிருப்பை அமைத்துத் தர வேண்டும்” என்பதே மீரியபெத்தை வாழ் மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
Post a Comment