0
ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள், மட்டக்களப்பிலுள்ள சிவில் சமூகப்பிரதிநிதிகளையும் தமிழ் மற்றும் முஸ்லிம் முக்கியஸ்தர்களையும் வெள்ளிக்கிழமை (21) சந்தித்துக் கலந்துரையாடினர். 

மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் எஸ்.கமலதாஸ் தலைமையில் அதன் உறுப்பினர்களை கல்லடி அலுவலகத்தில் ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடினர். 

மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில்  காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனப் பிரதிநிதிகள் மற்றும் ஆரையம்பதி முக்கியஸ்தர்கள், சர்வமத முக்கியஸ்தர்கள், மதப் பிரமுகர்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகளையும் இவர்கள்  சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தற்போதைய நிலைமை, அபிவிருத்தி நடவடிக்கைகள், இன நல்லுறவு பற்றி ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கேட்டறிந்தனர்.  

இலங்கையின் அரசியல் விவகாரங்களில் அமெரிக்கா ஒருபோதும் தலையிடாது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்குமான உறவு என்றும் நிலைத்திருக்கும். மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கும் என ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் கூறியதாக மட்டக்களப்பு பிரஜைகள் சபையின் தலைவர் எஸ்.கமலதாஸ் தெரிவித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகளான பங்களாதேஷ், பூட்டான், நேபாளம் மற்றும் மாலைதீவுக்கான காரியாலயத்தின் பணிப்பாளர் திருமதி கிளின்டன் எஸ்.ராட் பிறவுன் மற்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவரலாயத்தின் அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரதி தலைவர் சியோபான் ஓட் ஐட்ஜ் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் சார்பில் அதன் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர்,  அதன் நல்லிணக்கக்குழுத் தலைவர் யு.எல்.எம்.என்.முபீன், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்பின் தலைவர் எஸ்.மாமங்கராசா தலைமையிலான சிவில் சமூக அமைப்பின்  பிரதிநிதிகளையும் தனித்தனியே இவர்கள் சந்தித்து கலந்துரையாடினர்.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top