(த.லோகதக்சன்)
மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண் சரிவு அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் உடைகள் உதவி வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் தலைமையில் கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலய முகாம் மற்றும் பூணாகல தமிழ் மகா வித்தியாலய முகாம் ஆகியவற்றில் வாழும் பாதிக்கப்பட்ட 54 குடும்பங்களுக்கு சிறுவர் முதல் பெரியோர் வரை இருபாலாருக்குமான அனைத்து வகையான உடைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்வுதவி தங்களுக்கு பெரும் உதவியாக அமைந்ததாகவும், இவ்வுதவியை வழங்கிய சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினருக்கும், மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையினருக்கும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரனுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் அழுதவாறு நன்றி தெரிவித்தனர்.
இம்மக்களுக்கு சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினரால் இரண்டு இலட்சத்து நாற்பத்தையாயிரம் ரூபாய் உடனடி உதவிக்காக வழங்கியிருந்தார்கள்.
இதன்போது இம்மக்களுக்கு மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியாக உடைகள் வழங்கி வைக்கப்பட்டது.
சுவிஸ்லாந்து அன்பே சிவம் அருள்மிகு சூரிச் சிவன் கோயில் சைவத் தமிழ்ச் சங்கத்தினர் கடந்த கால யுத்த சூழலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார ரீதியாகவும், பல்கலைக் கழக கல்வியை கற்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும், கணவனை இழந்த பெண்களின் சுயதொழிலுக்காகவும், அனர்த்தங்கள் ஏற்படும் போதும், தென்னை மரக் கன்றுகள் போன்ற பல உதவிகளை தமிழ் உணர்வு மற்றும் ஆன்மீக உணர்வுடன் சேவையாற்றி வருகின்றனர்.
மலையக மக்கள் தற்போது பாதிக்கப்பட்டதற்கு உடனடியாக வெளி இடங்களிலும் இருந்து முதல் தடவையாக தங்களுக்கு இவ்வுதவி வழங்கி இருந்ததாகவும், இது தங்களுக்கு அவசியமாக தேவைப்படும் உதவியெனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment