சீரற்ற காலநிலையின் விளைவாக ஏற்பட்ட அடை மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஐந்து கிராமங்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாக வாகரைப் பிரதேச செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
17 நலன்புரி நிலையங்களில் 2349 குடும்பங்களைச் சேர்ந்த 8234 பேர் தஞ்சம் புகுந்துளார்கள்.
இதனை விட உறவினர் நண்பர் வீடுகளில் 4837 குடும்பங்களைச் சேர்ந்த 16661 பேர் தங்கியுள்ளார்கள்.
தூரப் புறக் கிராமமான கட்டுமுறிவு, ஆண்டான்குளம், தோணிதாட்டமடு, குஞ்சன்குளம் மற்றும் மதுரங்குளம் ஆகிய கிராமங்கள் பிரதான நிலப்பரப்பிலிருந்து பயணம் செய்ய முடியாதவாறு சனிக்கிழமை காலை முதல் வெள்ளத்தினால் துண்டிக்கப்பட்டுள்ளன.
இதனால் அம்மக்களது இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
கட்டுமுறிவு, மற்றும் ஆண்டான்குளக் கிராமங்களில் 207 குடும்பங்களைச் சேர்ந்த 740 பேரும், தோணிதாட்டமடுவில் 37 குடும்பங்களைச் சேர்ந்த 55 பேரும், குஞ்சங்குளம் மற்றும் மதுரங்குளம் கிராமங்களில் 190 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேரும் தங்களது கிராமங்கள் வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவு ஒட்டு மொத்தத்தில் வெள்ளக்காடாய்க் காட்சியளிக்கிறது.
Post a Comment