0
(எருவிலூர் நிரோசன்)

வழமைபோல் இம்முறையும் மட்டக்களப்பு மாநகர சபையில் இடம்பெற்ற புத்தாண்டினை வரவேற்கும் நிகழ்வு அதன் ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் இனிதே இடம்பெற்றது.

இதில் மாநகர உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டதுடன் இன்றைய தினம் அரசாங்க சுற்றறிக்கையின் பிரகாரம் அரச சேவை உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாண உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஆணையாளர் மா.உதயகுமார் குறிப்பிடுகையில் “பிறந்திருக்கும் புதுவருடத்தில் அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வாழ்த்தியதோடு, கடந்த வருடம் சிறந்த சேவையை வழங்குவதற்கு தன்னுடன் இணைந்திருந்த சகல உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தனது வாழ்த்துதலையும் தெரிவித்ததோடு குறிப்பாக சுகாதாரப் புகுதியை சேர்ந்த ஊழியர்களுக்கும் வேலைப்பகுதி ஊழியர்களுக்கும் தனது பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்தார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் “மக்களின் பணத்தில் சம்பளம் பெறுகின்ற அரச ஊழியர்களாகிய நாம் அரசாங்க கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் என்பவற்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயரிய அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்”

கடந்த மாதத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற மாநகர சபை சுகாதாரப் பகுதி மற்றும் வேலைப்பகுதி ஊழியர்களுக்கு நாளை மற்றும் நாளைய மறுதினங்களில் நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

நிறைவாக விசேடமாக ஆயத்தமாக்கப்பட்டிருந்த சிறிய விருந்து நிகழ்வில் பால் பொங்கல் மற்றும் சம்பல் பரிமாறப்பட்டதுடன் நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.








Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top