0
(மன்மதன்)

மட்டக்களப்பில் பலத்த மழை காரணமாக மட்டக்களப்பு நகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் நகர்பகுதியில் தமது தேவைகளை பூர்த்தி செய்யவரும் மக்கள் பாரிய சிரமத்திற்குள்ளாகின்றனர்.

சுமார் நான்கு அடிக்கு மேற்பட்ட வெள்ளநீர் நகரின் பிரதான பஸ் தரிப்பு நிலையம் , சந்தையை அண்டிய பகுதி மற்றும் மட்டக்களப்பு வாவியினை அண்டிய வீதிகளிலும்  பரவியுள்ளதனால் , புதுவருடத்தினை எதிகொள்ளும் மக்கள் தமக்கான கொள்வனவுகளை மேற்கொள்வதற்கு போக்குவரத்து இன்றியும், நகரில் வெள்ளநீர் பரவியுள்ளதனாலும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

நேற்றைய தினத்திலிருந்து தொடர்  மழை பெய்துவருவதனாலும், மட்டக்களப்பின் பிரதான உன்னிச்சை குளம் பத்து அடி வரைக்கும் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையினாலுமே  இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வாழைச்சேனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் நான்கு அடிக்குமேல் வெள்ள நீர்  பரவியுள்ளதனால் தூர போக்குவரத்துக்களும் முற்றாக தடைப்பட்டுள்ளது.

மட்டக்களப்பின் படுவான்கரை பிரதேசமாகிய வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை, கன்னன்குடா, உன்னிச்சை, குறிஞ்சாமுனை போன்ற பகுதிகளும் , மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதூர், வீச்சுக்கல்முனை, திமில தீவு போன்ற பிரதேசங்களிலிருந்து மக்கள் மட்டக்களப்பு நகருக்கு போக்குவரத்தினை மேற்கொள்ளும் சுமைதாங்கி பாலத்தின் மேலால் அதிக வேகத்துடன் வெள்ளநீர் பரவி செல்வதனால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. 

போக்குவரத்து தடைப்பட்டு இப்பிரதேசங்களுக்காக இன்று காலை  தொடக்கம் மட்டக்களப்பு மாநகர சபையினால் படகுச் சேவை இடம்பெற்று வருகின்றது. 

இவ்வாறாக இடம்பெறும் படகு போக்குவரத்திற்காக இருவழி போக்குவரத்திற்கும் ஒரே ஒரு படகு  ஈடுபடுத்தப்பட்டுள்ளமையினான் பொதுமக்கள்  பெரும் அசெளகரியத்திற்குள்ளாவதாக கவலை தெரிவிக்கின்றனர்.



















Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top