வெள்ளப் பாதிப்புக்குள்ளாகி மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான்குளம், தருமபுரம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருப்பவர்களில் சிலர், வயிற்றோட்டம் மற்றும் சிரங்கினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு புதன்கிழமை (24) சிகிச்சை அளிக்கப்பட்டது.
நடமாடும் மருத்துவ சேவை மூலமாக 300 பேர் இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்றதாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் தெரிவித்தார்.
தொடர்ந்து அடை மழை பெய்கின்ற நிலையில், தொற்றுநோய்களும் ஏற்படுகின்றன. இந்த நிலையில், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு அமையவும் பிரந்திய சுகாதார வேவைகள் பணிப்பாளரின் பணிப்புக்கு அமையவும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஜி.சுகுணன் தலைமையிலான குழுவினரால் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து நலம்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களுக்கான சுகாதார வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன், புதன்கிழமை (24) தெரிவித்தார்.
நலம்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் நாளாந்தம் பரிசோதிக்கப்படுவதாகவும் மலசலகூட வசதிகள் தொடர்பில் கண்கானிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்கள் நோய்த் தாக்கத்துக்கு உள்ளானால் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்வதற்கு அம்பியூலன்ஸ் வண்டியும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன் தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment