மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள ஆபத்து நிலைமையானது மேலும் தொடருவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. இன்றுவரை 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் சுமார் 300000 க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெர்ந்த நிலையில் 78 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்காக உடனடித் தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மேலும் தொடரும் பருவநிலையின் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரும் நிலை உருவாகலாம். எனவே அரச நிறுவனங்கள், தொண்டர் தாபனங்கள் தயார்நிலையில் இருந்தாலும் அதனை மேலும் ஸ்திரப்படுத்தவேண்டிய தேவைப்பாடு உள்ளது. காரணம் எதிர்வரும் நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு சாதகமானதாகத் தென்படவில்லை.
தொடர்ச்சியாக இன்று (23.12.2014) முதல் எதிர்வரும் வெள்ளிக் கிழமை வரை கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதோடு மழையானது இடியுடன் கூடியதாக அமையலாம் எனவும் எதிர்வுகூறப்படுகின்றது. கீழே காட்டப்பட்டுள்ள எதிர்வுகூறல் வானிலை அடையாளங்களின்படி எதிர்வரும் 10 நாட்களில் 7 நாட்கள் மழைக்குரியதாகக் காட்டப்பட்டுள்ளது.
3 நாட்கள் விட்டு விட்டு வானம் தெளிந்து காணப்படும். பொதுவாக வானிலை என்பது குறித்த நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் நிலவும் வளிமண்டலத்தின் பிரதிபலிப்பாகும். ஆகவே இத்தகைய எதிர்வு கூறல் நிலையானதல்ல அதற்குமப்பால் நிலைமை மணித்தியாலத்துக்கு மணித்தியாலம் மாறலாம் அம்மாற்றம் சாதகமாகவோ அல்லது மோசமாகவோ அமையலாம். இந்நிலையில் தொடர்ச்சியான வானிலை அவதானிப்புக்கள் மூலமே சரியான எதிர்வு கூறல்களை மக்களுக்கு வழங்க முடியும். இருப்பினும் இதுவரை பதிவான வானிலைத் தரவுகளின் அடிப்படையில் மழைக்குரிய நிலைமைகளே காணப்படுகின்றன.
மேற்படி தரவுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு மேல் நிலவும் வளிமண்டலத்தின் இன்றைய குறித்த நேரத்துக்கான நிலைமையை நோக்கினால் எதிர்வுகூறப்பட்டவாறு மழைப் பொழிவுக்கான சாத்தியப்பாட்டையே எடுத்துக்காட்டுவதை பின்வரும் செய்மதி விம்பத்தின் மூலம் கண்டுகொள்ளலாம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் வெள்ளத்துக்கான நீரானது இரண்டு வழிகளில் வந்தடைகின்றது. ஓன்று மாவட்டத்திற்குள் கிடைக்கும் கடுமையான மழைவீழ்ச்சி, மற்றயது மாவட்டத்துக்கு வெளியே குறிப்பாக மேற்கு மேனிலப் பகுதிகளிலிருந்து வருகின்ற மேலதிக நீர். இந் நீர் மட்டக்ககளப்பு மாவட்டத்திற்குள் வெள்ளத்தை ஏற்படுத்தக் காரணமான ஏதுக்களாக இரண்டு காரணிகளைக் குறிப்பிடலாம். முதலாவது காரணி, மாவட்டத்தின் இயற்கையான புவியியல் அமைப்பு. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பகுதி தாழ்நிலச் சமவெளியாக உள்ளதனால் இங்கு வெள்ளம் ஒரு பொதுவான இடர். அதனை மாற்றியமைக்க முடியாது. இவ்விடர் பேரனத்தமாக உருவெடுப்பதற்கான இரண்டாவது காரணியாக முறையற்ற விதத்தில் இடம்பெறுகின்ற நிலப்பிரயோகங்கள், புனரமைப்பற்ற வடிகால்கள், பரவலடைந்துவரும் சிறு குளங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். மட்டக்களப்பு மாவட்டத்தில் 302 குளங்கள் காணப்படுகின்றன அவற்றுள் 206 குளங்கள் பயன்படு நிலையிலையும் 96 பயனற்ற நிலையிலும் காணப்படுகின்றது (கச்சேரி, மட்டக்களப்பு-2010ஃ11).
இங்குள்ள குளங்கள் வெறுமனே விவசாய நோக்கிலமைக்கப்படவை மட்டுமல்ல வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் கருவிகளாகவும் அவை செயற்பட்டு வந்துள்ளன. எடுத்துக்காட்டாக உன்னிச்சை, உறுகாமம் குளங்கள் திறக்கப்படுகின்ற வேளை வெள்ள அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. 306 குளங்களும் மட்டக்களப்பில் இல்லாதிருந்திருந்தால், அவற்றால் குறிப்பிட்டளவு நீர் தடுத்து வைக்கப்படாமல் இருக்குமாயின் நிலைமையை கற்பனை செய்து பாருங்கள். ஆகவே இன்றைய வெள்ளத்திற்கு சிறு குளங்கள் பலவற்றின் உடைப்பு, அவற்றின் கைவிடப்பட்டநிலை என்பனவற்றையும் காரணமாகக் கருத முடியும். ஆகவே பௌதீக நிலைமை, வடிகால்கள், தோணாக்கள், வாவிகள், குளங்கள், நிலப்பிரயோகங்கள் எல்லாவற்றையும் கவனத்திற்கொண்ட ஒரு அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்புக்கு ஊடாகமட்டுமே வெள்ள ஆபத்துக்களையும், அவற்றின் பாதிப்புக்களையும் குறைத்துக்கொள்ள முடியும். இன்று மாறிக்கொண்டிருக்கும் உலக காலநிலை மாற்றம் இலங்கை;கே சவாலானதாக காணப்படுகின்ற அதேவேளை மட்டக்களப்பில் இத்தகைய நிலைமைகளை எதிர்காலத்தில் இதனிலும் மோசமாகத் தூண்டக் கூடும்.
மட்டக்களப்பு மாவட்டம் அதன் தரை உருவ அடிப்படையில் வேறுபட்டது. மாவட்டத்தின் ஜதார்த்தமான தரையமைப்பினை கண்டறிந்து நிலப்பிரயோகங்களை பொருத்தமான முறையில் திட்டமிடுவது கூட வெள்ளத்தைக் கட்டுப்படுத்த சிறந்த வழி. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்துக்கென அத்தகையதொரு தரையுயர மாதிரி இல்லாத நிலையிலேயே நிலப்பிரயோகங்கள் திட்டமிடப்படுகின்றன. அவற்றால் நிலப்பயன்பாட்டில் பொருத்தமற்ற மாற்றங்கள் ஏற்படுவதன் காரணமாக வாவிகள், தோணாக்கள், கால்வாய்கள் தமது நீரேந்தும், கொண்டுசெல்லும் இயற்கையான திறனை இழக்க நேரிடுகின்றது. ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அதன் தரையபைப்பை வெளிப்படுத்தும் ஒரு மாதிரி அவசியமாகின்றது. அதற்கூடாக வெளியுருவவியல் அடிப்படையில் நிலத்தை வகைப்படுத்தி அதன் பொருத்தப்பாட்டினை அடையாளம் கண்டு நிலைத்திருக்கும் அபிவிருத்திக்கு நோக்கி ஆக்கபூர்வமான திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
கீழ்வரும் படம் மட்டக்களப்பு மாவட்டத்தின் தரையமைப்பைக் காட்டுகின்றது. இதன்படி கரையோரத்திலிருந்து மேற்கு எல்லை நோக்கி உயர்ந்து செல்லுகின்ற நிலமானது எங்கு உயரமானது, எங்கு தட்டையானது, எது தாழ்வானது, எந்த இடம் மேடானது, சாய்வின் போக்கு எத்தகையது, பள்ளத்தாக்கின் தன்மை எப்படியானது போன்ற பல விடயங்களை இதன்மூலம் அடையாளம் கண்டுகொள்ளலாம். குறிப்பாக உன்னிச்சை, உறுகாமம் ஆகிய பிரதேசங்கள் 100 அடிக்கு மேல் அமைந்த ஒரு மேடு அதில் அமையப்பெற்ற இயற்கையான குழியில் குளங்கள் அமைந்துள்ளதை படத்தில் காணலாம். இவ்விரு நீர் தேக்கங்களிலிருந்தும் வெளியேறும் நீர் அதன் பள்ளத்தாக்கின் ஊடாக வாவியையும், தாழ்நிலப் பிரதேசங்களையும் எந்தப்பாதையின் ஊடாக சென்றடைகின்றது என்பதை காணமுடியும். அந்தவகையில் உன்னிச்சைக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டால் அது நேரடியாக வாவியில் விழுவதால் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பு வரை நீரில் மூழ்கும் நிலையும், உறுகாமம் குளம் திறக்கப்பட்டால் அது நேரடியாக மாவடிவேம்பு, சித்தான்டி பகுதியிலேயே வந்து விழுகின்றது. இதனால் அப்பகுதி நீருள் மூழ்கடிக்கப்படுவதுடன் வந்தாறுமூலை, கொம்மாதுறை, செங்கலடிப் பிரதேசங்களையும் வெள்ளத்தில் மூழ்கச் செய்கின்றது. இதனைவிட மாதுறு ஓயா, முந்தனையாறு (சந்தணமடு) பெருக்கெடுப்பதோடு வாழைச்சேனை வாவியை சித்தாண்டிப் பிரதேசத்திலும், கிரான் பிரதேசத்திலும் கலப்பதனால் அதனை அண்டிய பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின்றன.
மாவிலாறு வெள்ளச் சமவெளியில் இரு கிளைகளாகப் பிரியும் மகாவலி கங்கை வெருகலுக்கூடாகவும், கொட்டியாரக் குடாவுக்கூடாகவும் கடலை அடைகின்றது. இதில் வெருகலாறு பெருக்கெடுப்பதன் மூலம் கதிரவெளியில் இருந்து மாங்கேணி வரை வெள்ளப் பாதிப்பு ஏற்படுகின்றது. அத்தோடு நவகிரி குளத்தில் இருந்து வெளியேறும் நீரும், அந்தெல ஓயா பெருக்கெடுத்து மட்டக்களப்பு வாவியை அடைவதன் காரணமாக மட்டக்களப்பின் தென்பகுதி நீரில் மூழ்கக் காரணமாகின்றது. பொதுவாகப் பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கே அமைந்த மேனிலப் பகுதி தவிர்ந்த 70 சத வீதமான நிலப்பரப்பு வெள்ள ஆபத்து மிக்க பகுதிகளாக மாறுகின்றது.
இத்தகைய ஆபத்திலிருந்து மக்களை மீட்க இப்பிரதேசத்தில் அமைந்து காணப்படும் இயற்கையான சில உருவமைப்பு இம் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பளிக்கும் இயற்கை அரன்களாக வடிகால்களும், தோணாக்களும், வாவிகளும் காணப்படுகின்றன. அவற்றை முதலில் பாதுகாக்க முறையான திட்டத்தை வகுக்க வேண்டியது எதிர்கால சவால்களை சமாளிக்க உள்ள ஒரேஒரு வழியாகும். அவை இன்று அழிவடைந்து செல்லும் போக்குக் காணப்படுகின்றது. அவற்றை அழியவிட்டுவிட்டு அனர்த்த முகாமைத்துவம் பற்றி பேசுவது அர்த்தமற்றது. அனர்த்த முகாமைத்துவம் என்பதற்குள் நிவாரணப் பணிசெய்வதும், குறித்த தருணத்தில் நீருள் மூழ்கும் மக்களை மீட்டு இடைத்தங்கல் முகாமில் சேர்ப்பதும் என்பது அதில் ஒரு பகுதியே. ஆனால் நீண்டகால பாதுகாப்பும், அதற்கான முன்னாயத்தமும் வலுப்பெற்ற ஒரு சமுதாயத்தால் மட்டுமே தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனை உறுதிப்படுத்த மாவட்ட அளவிலான திட்டங்கள் வெற்றிடமாகவே உள்ளது. வெள்ளம் மட்டக்களப்பில் பல நூறு ஆண்டு வரலாற்றைக் கண்டு வருகின்றது. இன்றைய தொழில் நுட்பம், அறிவியல், ஆக்கத்திறன் மிக்க மனித வளம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து அர்ப்பணிப்பும், மக்கள் நலனிலும், பிரதேச அபிவிருத்தியிலும் அக்கறைமிக்க எமது மாவட்டத்தின் அரசஅதிபரின் அனுசரணையில் வெள்ளத்தின் தாக்கத்தை மட்டக்களப்பில் மட்டுப்படுத்த முடியும் அதற்கான முயற்சிகளை முறைப்படி முன்னெடுப்பது அவசியமாகும்.
கிருபா இராஜரெட்ணம்
விரிவுரையாளர், புவியியற்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
விரிவுரையாளர், புவியியற்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
Post a Comment