எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் எடுத்த தீர்மானத்தை, நாங்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். நாங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்போம் என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், திங்கட்கிழமை(22) தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்த முடிவு தெடர்பில் ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு காத்தான்குடியிலுள்ள ஜனாதிபதியின் பிரசார அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. அந்த சந்தர்ப்பத்தில் சமூகம் தொடர்பான பல்வேறு பட்ட கோரிக்கைகளை நாம் முன் வைத்தோம்.
அதில் மிகவும் முக்கியமான கோரிக்கைதான் அமைச்சர் அமீர் அலிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி கொடுக்கப்படல் வேண்டுமென்பது. அதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் கொடுக்கப்பட்டது.
அந்த அடிப்படையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருக்கும் போதுதான் இன்று திடீரென பொது வேட்பாளர் மைத்திரியை ஆதரிப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார்கள்.
கட்சியின் சார்பில் மைத்திரிபால சிறிசேனவுடன் அல்லது அவருடன் செயற்படும் எந்த தலைவர்களுடனோ எந்த வித பேச்சுவார்த்தைகளோ இடம் பெற்றதாக நாங்கள் அறியவில்லை.
அவ்வாறான பேச்சுவார்த்தைகளுக்கு கட்சியின் பிரதி தலைவர் சட்டத்தரணி சஹீத் அல்லது கட்சியில் இருக்கின்ற பிரதியமைச்சரான நானோ அழைக்கப்படவுமில்லை. பேச்சுவார்த்தை நடாத்தப்படவுமில்லை.
அவ்வறான நிலையில் எந்தவித நிபந்தனையுமின்றி பேச்சுவார்த்தைகளுமில்லாமல், அமைச்சர் ரிஷாத், மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பது எனும் தீர்;மானத்தை அறிவித்துள்ளார்கள்.
ஆகவே, கட்சியின் உறுப்பினர்களை நான் அழைத்து, இது தொடர்பில் கலந்துரையாடிய போது, கலந்து கொண்ட அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தொடர்ந்தும் ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துள்ளார்கள்.
காத்தான்குடி நகர சபையின் தலைவர் மற்றும் பிரதி தலைவர், உறுப்பினர்கள் என்னோடு சேர்ந்து இந்த முடிவை எடுத்துள்ளதுடன், மேல்மாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் பாயிஸ் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நான் அமைச்சர் ரிஷாத்தின் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவில்லை நான் உங்களுடன் இருக்கின்றேன் என கூறினார்.
இந்த தேர்தலில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பது என்ற தீர்மானத்தை நாங்கள் எடுத்திருக்கின்றோம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரசிலேயே நாங்கள் இப்போதும் இருக்கின்றோம் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏனைய விடயங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுப்போம்.
அமைச்சர் ரிஷாத், தான் எடுத்த முடிவு முட்டாள்தனமாது என்பதை தேர்தலின் பின்னர், இந்த தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவே வெல்வார் என்றார்.
Post a Comment