நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பது தொடர்பிலான கூட்டங்கள் பரவலாக நடைபெற்றுவந்தாலும் குறித்த கூட்டங்கள் கண்துடைப்புக்கானவை என்றும் மைத்திரி பால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும் நம்பகரமான தகவல்கள் தெரிவித்துள்ளன.குறித்தகவல்களின் அடிப்படையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவருடைய இல்லத்தில் சந்தித்த முன்னாள் ஜனாதிபதியும் பொது எதிரணியின் அமைப்பாளருமான சந்திரிகா பண்டாரநாயக்க சில வாக்குறுதிகளை வழங்கியதன் அடிப்படையில் சம்பந்தன் உடன்பட்டிருக்கிறார்.
குறிப்பாக மைத்திரபால சிறிசேனவின் தலைமையில் அமையவுள்ள தேசிய அரசில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவருக்கு அமைச்சுக்களை வழங்குவதற்கு தாம் தயார் நிலையிலிருப்பதாகத் தெரிவித்த சந்திரிகா
இதன் அடிப்படையில் இணங்கிக்கொண்ட சம்பந்தன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மைத்திரிபால சிறிசேனவிற்கான தேர்தல் பரப்புரை நடவடிக்கைகள் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோரிடம் குறித்தவிடயங்கள் தொடர்பில் தெரிவித்ததுடன் அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமாறு பணிப்புரைவிடுத்ததன் பின்னர் அவசரமாக இந்தியா பறந்திருக்கின்றார்.
இந்நிலையில் ஆலோசனை என்ற பெயரிலான கூட்டங்களை மாவை சேனாதிராஜா ஏற்பாடு செய்து கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் கருத்துக்கேட்கும் கண்துடைப்பு நடவடிக்கையினைத் தொடங்கியிருக்கிறார்.
இதேவேளை பிந்திய தகவல்களின் அடிப்படையில் வடக்கு மாகாணத்துக்கான மைத்திரி ஆதரவுக்கூட்டங்களுக்குப் பொறுப்பாக மாவை சேனாதிராஜா செயற்படுவார் என்றும் கிழக்கு மாகாணத்தின் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக மகேந்திரன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ள அதேவேளை ஒவ்வொரு கிழக்கின் மாவட்டங்களுக்கான பொறுப்புக்களை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெறிப்படுத்துவர் என்று தெரியவருகிறது.
இதேவேளை வன்னி மாவட்டத்திற்கான பொறுப்பினை சுத்தானந்தா இந்து இளைஞர் மன்ற முக்கியஸ்தர் சேனாதிராஜாவும் யாழ்.மாவட்டத்திற்கு சரவணபவன் அல்லது சுமந்திரனும் நிர்வகிப்பர் என்றும் தெரியவருகிறது.
இதேவேளை சில நாட்களில் தாயகம் திரும்பும் சம்பந்தன் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கே ஆதரவு என்பதை அறிவிப்பார் என்றும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Post a Comment