ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கடும் மழையினால் ஒட்டுமொத்தப் பிரதேசமும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்ற நிலையில், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கின்ற பொதுமக்களின் வீடுகளுக்குள் புகுந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் தலைமையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட குழுவினர், அந்தந்தப் பகுதி பொதுமக்களின் ஆலோசனைகளுடன் கனரக பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு வீதிகளில் வாய்க்கால்கள் தோண்டப்பட்டு, வெள்ளநீரை வடிகான்களோடு இணைக்கும் வேலைகள் இன்று (26-12-2014, வெள்ளிக்கிழமை) காலை ஆரம்பமாயின.
இதன் முதற்கட்டமாக, அக்கரைப்பற்று – 8, பிரதேச செயலக முன் வீதியோடு இணையும் குறுக்கு வீதிகளில் வாழும் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளில் புகுந்துள்ள வெள்ளநீரை வெளியேற்றும் வேலைகள் பிரதேச செயலாளரின் மேற்பார்வையுடன் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து வாச்சிக்குடா, நாவற்காடு, கோளாவில் மற்றும் பாதிக்கப்பட்ட ஏனைய பகுதிகளிலும் இவ்வேலைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment