0
காரைதீவு பிரதேச செயலக பிரிவிலுள்ள மதுபானசாலைக்கு 2015ஆம் ஆண்டுக்குரிய  அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்து வழங்க வேண்டாம் என கோரி, காரைதீவு பிரதேசத்திலுள்ள 115 பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஒப்பமிட்ட மகஜரை நேரடியாக  பிரதேச செயலாளர் திருமதி எஸ்.ஸ்ரீகாந்திடம், புதன்கிழமை (31) கையளித்தனர்.

இது தொடர்பாக பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் பொருட்டு பிரதேச செயலாளரின் அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மதுவரித் திணைக்கள பரிசோதகர் என்.சோதிநாதன், கல்முனை மதுவரி நிலைய அலுவலக பொறுப்பதிகாரி ரி.தயாளீஸ்பரகுமார் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

இதுதொடர்பாக பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

நினைத்த மாத்திரத்தில் ஒரு மதுபானசாலையை மூடுவதற்கு தனக்கு அதிகாரமில்லை. அது எனது அதிகார எல்லைக்கு அப்பாற்பட்டது.

ஆகையால் குறிப்பிட்ட 3 மாத கால பகுதிக்கு மாத்திரமே காரைதீவு மதுபானசாலைக்கான அனுமதியை வழங்கிவிட்டு அக்காலப்பகுதிக்குள் அதனை அகற்றுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளேன்.


உங்களை விடவும் இதுவிடயத்தில் நான் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றேன். காரணம் அவ்விடத்தில் வாங்கி அங்கேயே குடிப்பதால் வீதிவிபத்துக்களும் இடம்பெற்று வருகின்றது. இது எனது வீட்டுப்பிரச்சினை போன்றது.


ஆகையால் நான் மதுவரித் திணைக்கள உதவி ஆணையாளரிடம் தனிப்பட்ட முறையிலாவது கதைத்து 3 மாத காலத்திற்குள் அதனை இவ்விடத்திலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதற்குரிய சாதகமான முடிவைப் பெற்றுத்தருவேன் என தெரிவித்தார்.





Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top