கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கை, புதன்கிழமை(31) முதல் மீண்டும் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி ஜெயரத்ன தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஊடகமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை கூறினார்.
இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் நடவடிக்கை கடந்த 2011 ஆண்டு முதல் தற்காலிகமாக கைவிடப்பட்டிருந்தது. அதனை மீண்டும் செயற்படுத்தி இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்காக யோசனையை பாதுகாப்பு அமைச்சு முன்வைத்ததுடன் அதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இதனையடுத்து இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் முறை நேற்று புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இரட்டை பிரஜாவுரிமையானது இரண்டு வழிமுறைகளில் வழங்கப்படும். இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பிரஜாவுரிமை பெற்றவர்கள் மீண்டும் தமது தாய்நாட்டுக்கு வரவிரம்பினால் அவர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கப்படும்.
மற்றது, ஏனைய நாடுகளை சேர்ந்;தவர்கள் இலங்கையில் பிரஜாவுரிமை பெற விரும்பினால் அவர்களுக்கும் வழங்கப்படும்.
முதலில் 5வருடங்கள் வீசா வழங்கப்பட்டு பின்னர் அவர்களது நடவடிக்கைகள் அவதானிக்கப்பட்டு பிரஜாவுரிமை வழங்கப்படும்.
இலங்கையில் பிரஜாவுரிமை பெற எதிர்பார்பவர்கள் தாம் வசிக்கும் நாடுகளில் சிறந்த பிரஜைகளாக செயற்பட்டிருக்கவேண்டும் அத்துடன் அவர்கள் இலங்கைக்கு பயன்தரும் வகையிலும் நற்பிரஜைகளாகவும் செயற்பட்டால் மாத்திரமே அவர்களுக்கு இலங்கை பிரஜை அந்தஸ்து வழங்கப்படும்.
முன்னர் இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் போது அவர்கடைய விண்ணப்பங்கள் பரிசீலிக்ப்படும் ஆனால் தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, பிரஜாவுரிமைக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரி அதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர் முன்னிலையில் நேர்முகப்பரீட்சைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இலங்கையில் பிரஜாவுரிமை பெறுவதற்கு 10 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே முடியும். அதற்கு காரணம் ஏனைய நாடுகளில் காணப்படும் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக அவர்களால் இரட்டை பிரஜாவுரிமையை பெற முடியாது என்பதாகும்.
அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா, நோர்வே, இத்தாலி, சுவீடன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றார்.
Post a Comment