0
கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 திகதி ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரழிவின் போது உயிர் நீத்தவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் பலத்த சோகத்திற்கும் மத்தியில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மட்டக்களப்பு மாவட்டத்தின்  பல பாகங்களிலும் இன்று (26) அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமியால் முற்றாக பாதிக்கப்பட்ட கல்லடி, திருச்செந்தூர், டச்பார், புதுமுகத்துவாரம் மற்றும்  நாவலடி  பகுதிகளில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளில் மெழுகுவர்த்தி மற்றும் தீபச் சுடர் என்பன ஏற்றி மலர்தூவி விஷேட பூசை வழிபாடுகளில் மக்கள் ஈடுபட்டு அஞ்சலி செலுத்தியதுடன் சுனாமியில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய விஷேட பூசைகளும் பிரார்த்தனைகளும் இடம்பெற்றன. மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில இடங்களில் கறுப்பு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.
இதேபோன்று கல்லடி ,திருச்செருந்தூர், புதுமுகத்துவாரம் பகுதிகளில் பலத்த சோகத்திற்கு மத்தியில் பல்வேறு பூசை வழிபாடுகள், அன்னதானம் வழங்கல் என்பனவும் இடம்பெற்றன. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாண சபை உறுப்பினர்களான இரா. துரைரெட்ணம், பிரசன்னா இந்திரகுமார் மற்றும் மும்மதப் பெரியார்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு ஆழிப்பேரலையின் கொடூரத்தால்  உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிகளில் அவர்களின் உறவினர்கள் அழுது புழம்பிய காட்சிகள் எமது கெமராக்களில் பதிவாகின. 













Post a Comment

வாசகர்களால் தெரிவிக்கப்படும் கருத்துக்களுக்கு BATTINEWS.LK பொறுப்பல்ல

 
Top