தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கினால், அது தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அமையும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற பத்திகையாளர் மாநாட்டில் பத்திகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசகருமான சிவசேனதுரை சந்திரகாந்தன் மேலுள்ளவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தமுறை தமிழரசுக் கட்சி அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குமென்றால் அந்தச் செயலை தமிழர்களுக்கு அரசியல் ரீதியாகச் செய்கின்ற படுகொலையாகத்தான் அதைப் பார்க்கமுடியும்.
ஏனென்றால் எதிரணியுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே எந்தவிதமான மக்கள் நலன் சார்ந்த குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு ஒன்றுமே சொல்லப்படவில்லை.
எனக்குத் தெரிந்த வகையில் ஐயாயிரம் ஏக்கர் காணியாவது மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால் விடுவிப்போம் என்று சொல்கிற வசனத்தைக்கூட கூட்டமைப்பினரால் சேர்க்க முடியாமல் போயிருக்கிறது.
அதைச் சேர்க்கச் சொல்லி சந்திரிக்காவுடன் கேட்டபோது, சந்திரிக்கா அவர்கள் மைத்திரிபால சிறிசேன அவர்களைப் பார்த்ததாகவும் மைத்திரிபால சிறிசேன அவர்கள் சம்பிக்க ரணவக்கவைப் பார்க்க அவர் அதற்கு பதில் சொன்னதாக கடைசியான தகவல் இருக்கிறது. இது ஒரு ஒண்மைத் தகவலும்கூட.
இந்த அடிப்படையில் தமிழர்களுக்குத் தீர்வும் இல்லை. அதிகாரப் பகிர்வும் இல்லை. வடபகுதியையே மாத்திரம் அதாவது வடக்கு கிழக்கை எல்லாம் மறந்து வடபகுதி காணிப் பிரச்சினைக்கே முடிவுகொடுக்க முடியாத, அதை எழுத்திலே உறுதிப்படுத்த முடியாத ஒரு கூட்டத்திற்கே இவர்கள் வாக்களித்தால்,
நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிற கடந்தகால இலங்கை அரசியல் வரலாற்றில் ஒப்பிட்டுக் கொண்டிருக்கிறபோது யாழ் மேலாதிக்கவாதிகளுடைய வர்க்க அரசியலாகப் பார்க்க முடியும். இந்த நாட்டை ஒன்றிணைக்கின்ற அல்லது அவர்கள் எதிர்பார்த்திருக்கின்ற தீர்வுத் திட்டத்திற்கான ஒரு அரசியல் போக்காகப் பார்க்கமுடியாது.
ஆகையால் இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பியோ, விரும்பாமலோ நீண்ட வரலாற்றிலே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு ஒரு இணக்கப்பாட்டு அரசியலுக்கு வந்தால் அதை வெளிப்படையாகப் பேசினால் பல நன்மைகள் மாற்றங்கள் தமிழர்களுக்கு நிகழ முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment