கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஆலையடிவேம்பு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இவ்வாண்டின் ஆலையடிவேம்பு பிரதேசத்திற்கான கலை இலக்கிய விழா இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. நவப்பிரியா பிரசாந்த் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசனும், விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், கணக்காளர் கே.கேசகன், கிராமசேவை நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாச, திவிநெகும பிரதேச உத்தியோகத்தர் கே.நேசராஜா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேசக் கலைஞர்கள் வழங்கிய கலை, கலாசார நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன், மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வைபவமும் இடம்பெற்றது. இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச சமுகசேவைப் பணிகளுக்காக திருமதி. மீனாட்சி வடிவேல், ஆன்மீகப் பணிகளுக்காக சிவஸ்ரீ தங்கவேல் சிவாச்சாரியார், அச்சு ஊடகப் பணிகளுக்காக இரத்தினம் நடராஜன், முறிவு வைத்தியம் மற்றும் மனையடி சாஸ்திரத் துறைக்காக காசுபதி தேவசிகாமணி, ஆன்மீக அறப்பணித் தொண்டுகளுக்காக சித்திரவேல் குழந்தைவடிவேல் ஆகியோர் பிரதேச செயலாளரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டதுடன், நினைவுக்கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற கலைநிகழ்வுகளில், கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்ற விநாயகபுரம், சிவகாமி தமிழ் அருங்கலைக்கூடம் கலைஞர்கள் வழங்கிய ‘பாசுபத அஸ்திரம்’ நாட்டுக்கூத்து சிறப்பிடம் பெற்றதுடன், பார்வையாளர்களின் கரகோஷங்களையும் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Post a Comment